பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்வெளிப் பயணம்

281

துள்ளது. அன்றைக்கு அவற்றை விண்ணில் பறந்து சென்று காண முடியாவிட்டாலும் தன் ஆசைகளை, அனுமானங்களை கதைகளாகவும் புராணங்களாகவும் பழங்கால மனிதன் படைத்து வழங்கத் தவறவில்லை.

காலப் போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் காரணமாகக் கருவிகள் பல கண்டறியப்பட்டன. அவற்றின் துணை கொண்டு விண்வெளியை மேலும் மேலும் ஆய முற்பட்டனர். எப்படியேனும் விண்வெளிக்குச் சென்று மீள்வதைத் தன் இலட்சியமாகக் கொண்டிருந்தனர் அறிவியல் ஆய்வாளர்கள்.

விண்ணை நோக்கி ராக்கெட் புறப்படுதல்

வாயு மண்டலத்திற்கு அப்பால் காற்று இல்லை. இதனால் சாதாரண விமானம் கூட வாயு மண்டலத்தைத் தாண்டிச் செல்வது இயலாததாக இருந்தது. எனினும் விஞ்ஞானிகள் தளராது தொடர்ந்து ஆராய்ச்சி செய்து ராக்கெட்டுகள் எனும் ஏவுகணைகளை உருவாக்கினர். இவற்றால் காற்று இல்லாத பகுதிகளிலும் உந்து விசையோடு ஊடுருவிச்செல்ல முடியும், இக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்வது எல்லா வகையிலும் எளிதாக ஆயிற்று.

ராக்கெட்டுகள் மிக விரைவாக வானில் பறந்து செல்லும். உந்து விசை ஊட்ட எரி பொருளாக திரவமாக்கப்பட்ட உயிர்வளியாகிய ஆக்சிஜனும் திரவ எரி சாராயமும் கலந்த கலவையை எரியச் செய்வதன் மூலம் ஆற்றல் மிகு உந்துவிசையை உண்டாக்கினர். இதனால் ராக்கெட்டுகள் வாயு மண்டலத்திற்கு அப்பாலும் விண்வெளியில் பறந்து செல்ல இயன்றது. இதில் ரஷியா, ஜெர்மனி, அமெரிக்க விஞ்ஞானிகள் முன்னிலை பெறலாயினர்.

முதல்முதலாக விண்ணில் செலுத்த வல்ல ராக்கெட்டை உருவாக்கிய பெருமை கோடார்டு எனும் அமெரிக்க விஞ்ஞானியையே சாரும். 1985ஆம் ஆண்டில் வடிவமைத்து உருவாக்கிய ராக்கெட் மணிக்கு 1,100 கி.மீ. வேகத்தில் 2,800 கி.மீ. தூரம் வரை செலுத்தப்பட்டது. இஃது விண்வெளி ராக்கெட் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இச்சாதனை விண்வெளி ஆய்வுலகில் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டது.

விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது. முதலாவது பூமியிலிருந்து விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் ராக்கெட் புவியீர்ப்பால் ஈர்க்கப்படும் நிலைக்கு ஆளாகிறது. அத்துடன் காற்று மண்டலத்தினுள்டே செல்லும்போது கடுமையான காற்று உராய்வுக்கு ஆளாக நேர்கிறது.