பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

அதிக அளவில் பயன்பட்டது. இவ்வுலோகம் அதிக அளவில் கிடைப்பது மட்டும் இதற்குக் காரணமன்று. அதன் பளபளப்பும் கனமற்ற, துருப்பிடிக்காத, மின்கடத்தும் மிகுதிறனும், எல்லாவற்றுக்கும் மேலாக விலைமலிவான உலோகம் என்பதும் முக்கியக் காரணங்களாகும். இருபதாம் நூற்றாண்டு 'அலுமினியக் காலம்’ எனப் போற்றப்பட்டதுண்டு.

உலகில் மிகுதியாகப் புதைந்துள்ள உலோகம் அலுமினியமே ஆகும். ஆனால், இது தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. ஆக்ஸிஜன் போன்ற தனிமங்களுடன் கலந்தே கிடைக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், பீகார், ஒரிசா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இவ்வுலோகம் அதிக அளவில் கிடைக்கின்றது.

அலுமினியம் அதிகம் கலந்துள்ள தாதுப் பொருள் பாக்சைட்டாகும். இத்தாது முதன் முதலாக தெற்குப் ஃபிரான்சில் உள்ள ‘லெபாக் (Leobauk) எனுமிடத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விடத்தின் பெயரையொட்டி இதற்கு பாக்ஸைட் எனும் பெயர் வழங்கலாயிற்று. இதையன்னியில் 'ஃபெல்சஸ்பார்’ களிமண், கிரியோலைட், கோரண்டம் ஆகியவற்றிலிருந்தும் அலுமினியம் கிடைக்கிறது. 'அலும்' (Alum) என்ற கிரேக்கச் சொல்லினடியாகப் பிறந்ததே 'அலுமினியம்’ என்ற சொல். பாக்சைட் தாதுப்பொருளில் இரும்பு ஆக்சைடு, டைட்டேனியம் ஆக்ஸைடு, சிலிக்கா போன்ற மாசுகள் கலந்துள்ளன. மின்பகுப்பு முறையில் அலுமினியம் அவற்றினின்றும் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. அலுமினியம் அமிலங்களில் கரைந்துவிடும் இயல்புள்ளதாகும்.

பெருமளவு அலுமினியம் அதன் உலோகக் கலவைகளாகப் பயன்படுகின்றன. அலுமினிய வெண்கலம் அலுமினியத்தின் உலோகக் கலவையாகும். இது செம்பும் அலுமினியமும் கலந்த உலோகக் கலவையாகும். சாதாரண வெண்கலத்தைக் காட்டிலும் இது மிகவும் வலிமை வாய்ந்தது. தங்கத்தைப் போன்ற மினுமினுப்பும் அரிப்பினை முழுவதும் எதிர்க்கும் பண்பினை உடையது. பாத்திரங்கள், நகைகள், கலைநயம் மிக்க போட்டோ பிரேம்கள் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது. ஃபிரெஞ்சு அரசாங்கத்தார் இந்த உலோகக் கலவையை பயன்படுத்தி நாணயங்கள் தயாரிக்கிறார்கள்,

அலுமினியம் லேசான, வெண்மையான உலோகமாக அமைந்துள்ளது. வெப்பத்தை மிக எளிதாகக் கடத்துகிறது. எனவே, சமையல் பாத்திரங்கள் மிகுதியும் இவ்வுலோகத்தைக் கொண்டே செய்யப்படுகின்றன. அலுமினியம் மின்சாரத்தை நன்கு கடத்துகிறது. இதனால் மின், தந்திக் கம்பிகளும் வடங்களும் இவ்வுலோகத்தால் அதிக அளவில் செய்து பயன்படுத்தப்படுகிறது. இதனை எளிதாகக் கம்பியாக நீட்டலாம். மெல்லிய தகடாக ஆக்கலாம். அலுமினியக் குழாய்கள் அதிக அளவில் பயன்படுகின்றன. மற்ற உலோகங்களுடன் அலுமினியத்தைக் கலக்கும்போது அதிகக் கடினத்தன்மை ஏற்படுகிறது. இதனால் இது எல்லாவித உலோக வேலைகளுக்கும் பயன்படுகிறது. அலுமினியத்தால் செய்யப்படும் மெல்லிய தாள்கள் மலிவாக இருப்பதால் விற்பனைப் பொருள்களின் மேலுறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீராவி, மணம் ஆகியவை மெல்லிய அலுமினியத் தாள்களை ஊடுருவி உள்ளே செல்லாததால் மருந்து தயாரிப்புத் தொழிலில் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. வெண்ணெய், பாலாடைக்கட்டி, குளிர வைக்கப்பட்ட பொருள்களும் மெல்லிய அலுமினியத் தாள்களாலேயே சுற்றப்படுகின்றன. உறுதிமிக்கதாக, அதே சமயத்தில் எடை குறைவாக இருப்பதால் அலுமினியக் கலவை உலோகங்கள் தரை, கடல், ஆகாய வாகனங்களுக்கு அதிகமாகப் பயன்பட்டு வருகிறது. கட்டிடத் தொழிலில் தற்போது அலுமினியம் பெரிதும் பயன்படுகிறது. இரும்புக் கம்பிகள் துருப்பிடிப்பதால் அலுமினியக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. மரத்தாலான சன்னல் பிரேம்களுக்குப் பதிலாக அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பல மரத்தச்சர்கள் அலுமினிய வேலை செய்யும் தச்சர்களாக மாறியுள்ளனர்.

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் : இன்றையத் தொலைத் தொடர்பு சாதனங்களுள் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருப்பது தொலைபேசியாகும். இந்த அரிய செய்தித் தொடர்புச் சாதனத்தைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆவார். இவர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை செவிடர் பள்ளியின் ஆசிரியராவார். காது கேளா