பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

இரத்த மண்டலம்

சோதனை செய்தும் எக்ஸ்-கதிர் மின்னலை வரைபடம் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்தும் துல்லியமாகக் கண்டறிவர். இரத்த அழுத்தத்திற்கான காரணங்களை ஆய்ந்து கண்டறிந்து, அவற்றைத் தவிர்த்தும் உரிய மருந்துகளை உட்கொண்டும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சீரான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

மருந்து இல்லாமல் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உடல் பருமனைக் குறைக்க வேண்டும். உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். புரதச் சத்து உணவுகளை மட்டாக உண்பது, அளவான உடற்பயிற்சி செய்வது போன்றவைகளை மேற்கொள்வது நலம்.

இரத்த மண்டலம் : இரத்தம், இதயம், இரத்தக்குழாய் இவை அனைத்தும் இணைந்த ஒன்றே 'இரத்த மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது.

நாம் உயிர் வாழ இன்றியமையாத பொருளாக அமைந்துள்ள இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களை மூன்று பெரும் பிரிவாகப் பிரிப்பர். முதல் வகைக் குழாய்கள் சிரைகள் (Weins) ஆகும். இவை இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வருகின்றன. இரண்டாம் வகை இரத்தக் குழாய் தமனிகள் (Arteries) எனப்படும். இவை இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லுபவைகளாகும். மூன்றாம் வகை இரத்தக்குழாய்கள் தந்துகிகள் (Capillaries) என்பவைகளாகும். இவை இரத்தத்தை உடல் திசுக்களுக்கு எடுத்துச் செல்லும் இரத்தச் சிறு குழாய்களாகும்.

இதயத்தில் சுத்தப்படுத்தப்பட்ட தூய இரத்தம் பெருந்தமனி எனும் பெரும் இரத்தக்குழாய் மூலம் வெளியே எடுத்துச் செல்லப்படுகின்றது. இஃது மேலும் சிறு தமனிகளாகப் பிரிகின்றது. அதன்பின் சிறு தமனிகளிலிருந்து சின்னஞ்சிறு குழாய்கள் பிரிகின்றன. இவையே தந்துகிகள் ஆகும். இத் தந்துகிகள் எனும் நுண்குழாய் மூலம் பாயும் இரத்தத்தோடு பிராணவாயுவும் உணவுச் சத்துக்களும் உடலெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதைப்போன்றே தூய்மையற்ற கெட்ட இரத்தம் சிரைகள் மூலம் இதயத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. அவை நுரையீரலால் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உடலெங்கும் பாய்ந்து பரவுகின்றன.

மனித உடலில் இரத்தவோட்டம்

இம்மூன்று வகை இரத்தக் குழாய்களில் தமனிகள் சற்றுப் பெரியவை; உறுதியானவை. அவை நம் உடலில் மணிக்கட்டு, நெற்றிப் பொட்டு போன்ற இடங்களில் மேல் தோலின் அருகாகவே ஓடுகின்றன. அவை கண்ணுக்கு தெரியும்படியாகப் புடைத்துக் கொண்டிருப்பதும் உண்டு. மற்ற இடங்களில் அவை உடலின் உட்புறமாகவே செல்கின்றன. எனவே தான் நாடித்துடிப்பை அறிய விழைவோர் மணிக்கட்டு அருகில் உள்ள தமனியை தொட்டு இரத்தவோட்ட அளவை நாடித் துடிப்பாகக் கண்டறிகின்றனர். இதயத் துடிப்பு வீதமே நாடித்துடிப்பாகக் கணக்கிடப்படுகிறது.

தமனிகளில் இரத்தம் விட்டு விட்டுப் பாயும். தமனிகளில் வால்வுத் தடைகள் இல்லை.

சிரைகளின் சுவர்கள் மென்மையானவை. தமனிகளில் போன்று சிரைகளில் இரத்தம் விட்டுவிட்டுப் பாயாது. ஒரே சீராக இரத்த வோட்டமிருக்கும். சிரைகள் வாயிலாக இதயத்தை நோக்கிப் பாயும் இரத்தம் எக்காரணம் கொண்டும் பின்னோக்கிப் பாய்ந்துவிடாமல் தடுக்க சிரைகளில் வால்வுத் தடைகள் அமைந்துள்ளன.