பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்த சேமிப்பு

67

மெல்லிய தந்துகிகளின் சுவர்கள் மிகவும் மென்மையானவை; நுண்மையானவைகளாகும்.

இரத்தச் சுழற்சி : உடல் முழுமைக்கும் இரத்தம் பாய்வது இரத்தச் சுழற்சி அல்லது இரத்த வோட்டம் என அழைக்கப்படுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்சிஜனையும் செரிமான உறுப்புகளிலிருந்து சத்துப் பொருட்களையும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் திசுக்களுக்கும் கொண்டு செல்வதுதான் இரத்தச் சுழற்சியின் தலையாய பணியாகும்.

அதேபோன்று திசுக்களிலிருந்து வெளிப்படும் கரியமிலவாயுவாகிய கார்பன்டையாக் சைடும் மற்றும் பல தீமை பயக்கும் கழிவுகளும் இரத்தச் சுழற்சி மூலமே மூச்சுவிடுவதன் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இரத்தச் சுழற்சியின் மூலம் சிறுநீரகத்தை அடையும் இரத்தத்திலிருந்து பல்வேறு கழிவுப் பொருட்கள் தனியே பிரிக்கப்பட்டுசிறுநீருடன் வெளிப்படுத்தப்படுகின்றன. உடல் உறுப்புகள் சீரான முறையில் இயங்கவும் அவைகளைச் செயல்படத் தூண்டவும் இரத்தச் சுழற்சியே மூலகாரணமாய் அமைகின்றது. மொத்தத்தில் நாம் உயிர் வாழவும் இயங்கவும் எப்போதும் தமனிகளிலும் சிரைகளிலும் இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்கவேண்டும்.

தாயின் கருப்பையில் சிசு உருவானது முதலே அதன் உடலில் இரத்தச் சுழற்சியும் ஏற்பட்டு விடுகிறது. சிசுவுக்கு வேண்டிய சத்துணவையும் பிராணவாயுவையும் சிசு தாயிடமிருந்து பெற சூல் மெத்தை உதவுகிறது. சிசுவிடமிருந்து வெளிப்படும் கழிவுகளும் சூல் மெத்தை மூலமே வெளியேறுகின்றன. கருவும் சூல் மெத்தையும் கொப்பூழ்க் கொடியுடன் இரண்டு தமனிகளும் ஒரு சிரையும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நல்ல இரத்தம் உட்செல்லவும் தீய இரத்தம் வெளியேறவும் இயலுகிறது. இவ்வாறு கருவில் இருக்கும் சிசுவுக்கும் இடையறா இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்கிறது.

இரத்த ஓட்டத்தை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் வில்லியம் ஹார்வி என்ற ஆங்கில விஞ்ஞானி ஆவார். இரத்தம் நம் உடம்பை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரம் 1 நிமிடம் 8 வினாடியாகும்.

இரத்த சேமிப்பு நிலையம் (Blood bank) : நமக்குத் திடீரென ஏதேனும் விபத்து ஏற்பட்டு பெருங் காயமோ அல்லது ஊனமோ ஏற்படும் போது உடலிலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. உடல் இழந்த இரத்தத்தை மீண்டும் உடலுள் செலுத்தாவிடில் உயிருக்கே ஆபத்து என்ற நிலை ஏற்படும்போது யாரேனும் உடனடியாக இரத்தம் வழங்கவேண்டியதாகிறது. இல்லையெனில் முன்பே சேகரிக்கப்பட்ட இரத்தத்தை 'இரத்த சேமிப்பு நிலைய'த்திடமிருந்து பெற்று இரத்தம் இழந்தவருக்குச் செலுத்தி உயிர் பிழைக்கச் செய்கிறோம். இத்தகைய இடரான சமயத்தில் இரத்தம் வழங்கி உயிர்காக்கத் துணைபுரியும் நிலையமே 'இரத்த சேமிப்பு வங்கி' என்று அழைக்கப்படும் ‘இரத்த சேமிப்பகம்' ஆகும்.

இந்த இரத்த சேமிப்பகத்தின் முக்கிய பணி இரத்தம் வழங்குபவர்களிடமிருந்து இரத்தத்தைப் பெற்று, அதன் இயற்கைக் குணப்பண்பு சிறிதும் மாறாமல் அல்லது அழியாமல் பாதுகாப்பதும் தேவையானபோது அவற்றைத் தந்துதவுவதுமே யாகும்.

அத்துடன் இரத்தம் கொடுப்பவர் அல்லது இரத்தம் பெறுபவர் ஆகியவர்களின் இரத்த வகைகளைக் கண்டறிந்து குறித்து வைத்தல், தருபவரின் இரத்த குளோபினின் அளவை கணக்கிட்டறிதல் ஆகியவைகளும் இரத்த சேமிப்பு நிலையத்தின் முக்கிய பணிகளாகும்.

இரத்த சேமிப்பு நிலையத்தில் இடம்பெறும் இரத்தம் உரையாமலிருக்கும்படியும் சேமித்த இரத்தம் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதோடு நோய் ஏதும் ஏற்பட்டுவிடாமல் பாதுகாப்பதும் சேமிப்பு நிலையத்தின் தலையாய பணியாகும். யாருக்கு இரத்தம் செலுத்த வேண்டுமோ அவருடைய இரத்த வகை பொருத்தம் ஆகியவைகளை ஆராய்ந்தறிதலும் இரத்த சேமிப்பு நிலையத்தின் பணியாகும்.

இரத்த சேமிப்பு நிலையத்திற்கு இரத்தம் வழங்க முன் வருபவர் எவ்வித நோயாலும் பிடிக்கப்படாதவராக, நல்ல உடல் நலமுடையவராக இருத்தல்வேண்டும். ஒருமுறை இரத்தம் வழங்கியவர் மறுமுறை இரத்தம் வழங்கவேண்டும் எனில் குறைந்தது மூன்று மாதங்கள் ஆக வேண்டும். இரத்தம் அளிப்பவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் வேண்டிய அளவில்