பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலை நாடுகளில் உருளைக்கிழங்கு உணவுக்காக மட்டுமின்றி மாட்டுத் தீவனப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கிலிருந்து மாவுப் பொருட்கள் தயாரிக்கிறார்கள். ஆல்கஹால் எனப்படும் மதுபானங்கள் தயாரிக்கவும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகிறார்கள். செயற்கை ரப்பர் உரு

உருளைக் கிழங்குச் செடி

வாக்கத்திற்கும் ஒருவித ஒட்டுப்பசை, ஒரு வகைப் பால் பொருள் தயாரிக்கவும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது,

உருளைக்கிழங்கை உணவாகக் கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய வெப்பத்தை எளிதாகப் பெற முடிகிறது. இதில் புரோட்டினும் உலோகச் சத்துக்களும் வேண்டிய அளவில் உள்ளன. இதில் பி,சி. வைட்டமின்களாகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன. உருளைக்கிழங்கிலுள்ள சத்துப்பொருட்களின் அளவானது உருளைக்கிழங்கின் இனத்தையும் வகையையும் பொருத்து வேறுபடும்.

வடஇந்தியாவில் வங்காளம், பீகார், அஸ்ஸாம் மாநிலங்களிலும் தென்னகத்தில் பெங்களுரிலும் நீலகிரி மாவட்டத்திலும் மிகுதியாக விளைகிறது.

உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) : உலகளாவிய முறையில் மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கென 1946ஆம் ஆண்டு ஜூலையில் நியூயார்க் நகரில் உலக மாநாடு நடைபெற்றது. 1948 ஏப்ரல் 7இல் உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்டது. இஃது பின்னர் 1951ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புடன் இணைக்கப்பட்டது. இன்று இதன் கிளைகள் எல்லா நாடுகளிலும் அமைந்து உலக மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காத்து வருகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாட்டின்படி உலக மக்களின் நோயைத் தீர்ப்பதும் சுகாதாரத்தைக் கற்பிப்பதும் மட்டும் நோக்கம் அன்று. உடல், உள்ளம், சமூகம் ஆகிய மூன்றின் நலன்களையும் பேணுவதாகும்.

இந்நோக்கத்தை இனிது நிறைவேற்றுவதற்கென சுகாதார அவை, செயற்குழு, செயலகம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டு திறம்படச் செயலாற்றி வருகிறது. இதன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.

உலக நாடுகளின் ஒத்துழைப்போடு கொடிய நோய்களான அம்மை நோயையும் மலேரியாக் காய்ச்சலையும் உலகிலிருந்தே முற்றாக ஒழித்துக் கட்டியிருப்பது உலக சுகாதார நிறுவனத்தின் சாதனையாகும்.

உலக வானிலையியல் நிறுவனம் (world Meteorological Organisation) : வானிலையியல் துறையில் உலகளாவிய முறையில் பணியாற்றுவதற்கென உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இது 1951இல் நிறுவப்பட்டது. வானிலையியலில் உலகக் கூட்டுறவை உருவாக்குவது, உலகெங்கும் வானிலை நிலையங்களை அமைத்து அவற்றிலிருந்து பெறும் வானிலை விவரங்களை உலகெங்கும் அனுப்பி உதவுதல், வானிலையை வாழ்க்கைக்குப் பயன்படுத்துதல், வானிலையியல் ஆராய்ச்சிக் கூடங்களையும் பயிற்சி நிலையங்களையும் உலகெங்கும் உருவாக்கி உதவுதல் ஆகியன இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்நிறுவனம் உலக வானியல் அவை, செயற்குழு, வட்டார வானிலை நிலையங்கள், நிரந்தரச் செயலகம் எனப் பல்வேறு பிரிவுகளாக அமைந்து, மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது. இதன் தலைமையகம் சுவிட்ஸர்லாந்து நாட்டில் அமைந்துள்ளது.

உலைகள் : நாம் வீட்டில் உணவு சமைக்க விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு,