பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்


சில இடங்களில் வெறுங் கற்பாங்கான இடை வெளிகளும் காணப்பட்டன. அவ்விதமான ஓரிடத்தில் பல விழுதுகள் தாங்கிநின்ற ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் ஒரு சிறு குடிசை இருந்தது. அதன் கூரைமீது சணல் வேய்ந்திருந்தது. அது பார்வைக்குப் பழைய காலத்து ரிஷிகளது ஆசிரமமான பர்ணகசாலை போன்று காணப்பட்டது. நான் பைத்தியக்காரன் போல் மலைமீது அலைந்துகொண்டே வருகையில், செடிகொடிகள் அடர்ந்து படர்த்திருந்த ஒரிடத்தில் மங்கையொருத்தி நின்று கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த மலர்களைப் பறித்துக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டுத் திகைத்து நின்றேன். ‘என்ன அது ! பெண்ணா !பேயா! தெய்வ மகளா! தேவலோக மகளிர் காடுகளிலும், மலைகளிலும் சிற்சில சமயங்களில் திரிந்து கொண்டிருப்பர் என்று சொல்லுகிறார்களே! அவர்களில் ஒருத்தியா இவள்? ஒருவேளை இது பொய்த் தோற்றமா? அல்லது என் மன மயக்கமோ? (என் கண்களை நன்கு துடைத்துக்கொண்டு மீண்டும் அவ்விடத்தைக் கூர்மையாக நோக்கி) இல்லை? இல்லை. இது பொய்த் தோற்றமில்லை. உண்மையே! அவள் பெண்ணே! மானுட மகளே! இதில் சிறிதுஞ் சந்தேகமில்லை. அவளது உருவம் என் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகிறதே!-- ஆமாம்; இவள் மானுடப் பெண்ணாயிருந்தால், இங்நிர்மானுஷயமான-கொடிய மிருகங்கள் வசிக்கக்கூடிய பயங்கரமான-இடத்தில் எப்படி யிருக்கமுடியும்? அப்படியானால, நான் கேட்ட-என்னை இன்பக்கடலி லாழ்த்திய, அவ்வினிய பாடலைப் பாடியவர் யார்? அவ்வுருக்கமான -- மெல்லோசை மிகுந்த-நெஞ்சங்கனிந்த-பாடலை இம்மங்கையே பாடியிருக்க வேண்டும்! அருகே சென்று பார்ப்போம்’ என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டே, அம்மங்கை - நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தேன்.