பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

மதீனா சட்டம் வழியமைத்தது. தங்கள் தங்கள் சமயங்களைப் பின்பற்றி வாழும் அதே சமயம் ஒட்டுமொத்த சமுதாய நலனுக்காக, சமய சகிப்புணர்வுடன் மக்கள் நலத்தை நாடிச் செயல்பட பெருமானாரின் மதீன நகர்ச் சட்டம் வழிவகுத்தது.

அச்சட்டத் தொகுப்பின் பிழிவைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்:

1. முஸ்லிம்களும் யூதர்களும் கிருஸ்தவர்களும் பிற சமயத்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களைப் போன்று ஒருங்கியைந்து வாழ வேண்டும்.

2. யார் யார் எந்தச் சமயத்தைச் சார்ந்தவரோ அவரவர் சமயத்தைப் பின்பற்றியொழுக முழு உரிமையுள்ளவராவார். ஒருவர் சமய விவகாரங்களில் மற்றவர்கள் அறவே தலையிடக் கூடாது

3. ஏதாவது ஒரு மூன்றாவது கட்சியுடன் போர் ஏற்பட்டால், ஒருவர் மற்றவர் உதவிக்குச் செல்ல வேண்டும். இவ்வுதவி பெறுவதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு. அதாவது, யார் உதவி கோறுகிறாரோ அவர் மூன்றாவது கட்சியினரால் தாக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும். உதவி கோறுபவர் ஆக்கிரமிப்பாளராக இருக்கக் கூடாது.

4. வெளியாரால் மதீனா நகரம் தாக்கப்பட்டால் அப்போது, சமயம், இனம் பாராது அனைத்து மக்களும் ஒன்றுபட்டு மதீனா நகர் காப்புப் பணியில் ஈடுபடுதல் வேண்டும்.

5. போராயினும் அமைதிக் காப்பாயினும் எந்த ஒரு முக்கிய நடவடிக்கையின்போதும் ஒருவரையொருவர் கலந்தா லோசித்த பின்னரே முடிவுகள் மேற்கொண்டு செயல்பட வேண்டும்.