பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

உங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கிருஸ்தவ சமயச் சுதந்திரத்தையோ எங்களது நிம்மதியையோ கெடுத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை,” எனப் பதிலளித்தனர் என்பது வரலாற்றுச் செய்தி.

மாலிக் கபூர் படைக்கெதிராக
தமிழ் முஸ்லிம்கள்

இதே போன்ற ஒரு நிகழ்ச்சி நம் தமிழகத்திலும் நடை பெற்ற வரலாற்றுச் சான்று இன்றும் கட்டியங்கூறிக் கொண்டுள்ளது.

தமிழகம் வந்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கை நெறியாலும் வாழும் முறையாலும் மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல நாடாளும் மன்னர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் விளங்கினர். இதன் விளைவாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் போர்ப் படையில் அங்கம் பெற்றிருந்தனர். மைசூரை ஆண்டுவந்த ஹொய்சாள மன்னன் வீர வல்லாளனிடம் அறுபதினாயிரம் முஸ்லிம் வீரர்கள் அவன் போர்ப்படையில் போர்வீரர்களாகப் பணியாற்றி வந்தனர் என இப்னு பதூதா குறிப்பிட்டுள்ளார்.

போர்ப் படையில் மட்டுமல்ல, நாட்டு நிர்வாகத்திலும் முக்கியப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் அங்கம் பெற்றிருந்தனர். பாண்டிய நாட்டை ஆண்டு வந்த ஜாதவர்மன் சுந்தர பாண்டியனின் தலைமையமைச்சராக சையத் தகிய்யுத்தீன் என்பவர் பணியாற்றி வந்தார். போர்ப்படையின் தலைமைப் பொறுப்பும் அவரிடமே இருந்து வந்தது. இவருடைய சகோதரர் சையித் ஜமாலுத்தீன் என்பவர் போர்த் தளபதியாக இலங்கை மன்னன் பராக்கிரமபாகு மீது படையெடுத்துச் சென்ற படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற பெருமைக்குரியவர். சீனமன்னன் குப்ளாய் கானின் அரசவையின் பாண்டிய நாட்டின் தூதுவராக அமர்ந்து பணியாற்றியுள்ளார்.