பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

வரச் செய்தார். அதோடு, சிலை வணக்க மாதா கோயில் களை இடித்துத் தரை மட்டமாக்கி வந்தது பேரரசன் லியோ இஸுரியன் சிலைவணக்க எதிர்ப்புக் கிருஸ்தவப் படை. இப்படை நாடெங்கும் தன் கைவரிசையைக் காட்டி இறுதியாக மெளன்ட் சினாய் பகுதியை அடைந்தது.

அங்கே ஒரு கிறிஸ்தவ மடாலயம் இருந்தது. அங்கே இருந்த கிருஸ்தவர்கள் சிலை வணக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அம்மடாலயத்தில் தங்கி இருந்த கிருஸ்தவத் துறவிகள் தங்கள் விருப்பம் போல் சமயச் சடங்குகளைச் செய்து, சிலை வணக்கமாக ஏசுவையும் மாதாவையும் மற்ற தெய்வங்களையும் வழிபட்டு வந்தார்கள்.

ஆனால், அந்த மெளன்ட் சினாய் பகுதி அப்போது உமையா கலீஃபாக்களின் ஆட்சிப் பகுதியாக அமைந்திருந்தது. முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியின் எல்லையில் சிலை வணக்கத்தலமாக அமைந்திருந்த அம்மாதாகோயில் மடாலயத்தை பேரரசர் லியோ இஸுரியனின் படைகள் தாக்கி அழிக்க முயன்றபோது, முஸ்லிம் படை வீரர்கள் அவர்களை அடித்து விரட்டி, மாதாகோயிலைக் காத்தனர். அது மட்டுமல்லாது, இஸ்லாமிய ஆட்சியின் எல்லைப் பகுதிக்குள் மாதா கோயில் மடாலயம் அமைந்திருப்பதால் பைஸாந்தியப் போர் வீரர்களால் அம்மடாலயத்திற்கு ஏதேனும் ஊறுபாடு நேரலாம் என்று அஞ்சிய முஸ்லிம் ஆட்சியினர் அம்மடாலயத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளித்துக் காத்தனர். இதன் மூலம் அக்கிருஸ்தவ மடாலயம் அழிவினின்றும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டதோடு, அஃது என்றும் போல் அமைதியாகச் செயல்பட அரண் போலமைந்து பாதுகாப்பளித்தனர் என்பது வரலாறு தரும் அரிய செய்தியாகும்.