பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

களிலேயே உயிர்ப்புடன் இன்றும் வாழ்ந்து வருவது இந்தியப் பண்பாடேயாகும் என்பது வரலாறு தரும் பேருண்மையாகும். இந்தியாவைப் போல பழைமையான பண்பாடுகள் பல உண்டு. கிரேக்கக் கலாச்சாரமும் ரோமப் பண்பாடும் எகிப்து நாகரிகமும் இன்றும் நம்மை வியக்க வைப்பவைகளாகவே உள்ளன. ஆனால், அதனை வரலாற்று ஏடுகளிலும் ஆங்காங்குள்ள பழஞ்சின்னங்களிலும் சிதைவுகளிலும் மட்டுமே காணமுடிகிறதே தவிர ஆங்காங்குள்ள மக்களின் வாழ்விலோ சமுதாயப் போக்கிலோ அதன் சாயல்களைக் கூட இன்று காண இயலவில்லை. இவையெல்லாம் சில நூறு ஆண்டுகட்கு முன்பு உருவான புதிய கலாச்சார, நாகரிகப் போக்குகளை ஏற்று முந்திய கலாச்சாரப் போக்குகளை முழுமையாகக் கைவிட்டு விட்டன. இன்றையப் போக்குக்கும் அன்றையப் போக்குக்கும் தொடர்பே இல்லாத நிலை உருவாகியுள்ளதை வரலாறாக மட்டுமே அறிய முடிகிறது.

இந்தியாவை அடுத்துள்ள எல்லா வகையிலும் பழம் பெருமைக்குரிய பெருநாடாக அமைந்திருப்பது சீனாவாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கலாச்சார, நாகரிகத்தை அண்மைக் காலம்வரை இடையறாது பெற்றிருந்த நாடும் கூட. ஆனால் அண்மைக்கால அரசியல், பொருளாதார, கலாச்சார மாறுதல்களின் விளைவாகப் பழையவற்றை ‘கலாச்சாரப் புரட்சி’ என்ற பெயரால் அறவே விலக்கி, புதிய போக்கை உருவாக்கிக் கொண்டு விட்டது. அங்கும் பழைமைக்கும் புதுமைக்குமிடையே விரைவாக விரிந்த இடைவெளி ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தன் பழமைச் சிறப்பை இழக்காமல் புதுமைப் போக்குகளையும் இணைத்துக் கொண்டு தன் தனித் தன்மையை இழக்காமல் சிறப்போடு விளங்கி வருவது இந்தியக் கலாச்சாரம்