பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134


இஸ்லாம் இந்திய நாட்டின்
சொந்த மார்க்கமே!

“இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையைவிட, பல நூற்றாண்டுகளாக இந்திய வாழ்க்கை நெறிக்கு அவர்கள் செய்திருக்கும் தொண்டுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இஸ்லாமிய மாண்புகள் (Values) இந்த நாட்டின் கலாச்சாரம், சிந்தனை, செயல் முறைகளின் மீது ஆழ்ந்த செல்வாக்கைப் பதித்திருக்கின்றன. வாழ்வின் எந்தத் துறையும் அவ்வாறு பயன் பெறாமல் இருக்கவில்லை. தத்துவம், ஆன்மீகம், அரசு நடத்தும் முறைகள் (State crafts), சமூக அமைப்புகள், கலை, கட்டிடக்கலை, இசை, இலக்கியம், கணிதம், மருத்துவம் இன்னும் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இந்தப் பயன்களை நாம் பார்க்கலாம். நம் உணவுப் பழக்க வழக்கமும், உடல் அமைப்புகளும், ஏன் நாம் பேசும் வார்த்தைகள் கூட அந்தப் பயன்களின் நற்பாதிப்புகளைப் பெற்றுத்தான் இருக்கின்றன.”

ஹிஜ்ரி 15ஆம் நூற்றாண்டையொட்டி டெல்லியில் 1981 ஜனவரி 28, 29, 30இல் நடைபெற்ற மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கண்டவாறு பேசி இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இம்மண்ணின் மைந்தர்களே என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தினார்கள். மேலும் அவர்கள் இதை விளக்கிப் பேசும்போது “இஸ்லாத்தை நாம் எப்போதும் நம் சொந்த மார்க்கமாக அங்கீகரித்து வந்திருக்கின்றோம். இஸ்லாம் இந்தியாவில் தடையின்றி, தொடர்ந்து வாழும் பல கலாச்சாரங்கள், பல தத்துவங்கள் கொண்ட நம்முடைய இந்தியா ஒர் உடல் என்றால் அந்தப் பல்வேறு தத்துவங்களும் கலாச்சாரங்களும் அதன் அங்கங்களாக அமைந்துள்ளன. இந்திய உடலின் ஒவ்வோர் அங்கமும் அதனுடைய தனிச் சிறப்பையும் சிறப்பம்சத்தையும்