பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

இருந்தாலும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் அவர்தம் சமய நம்பிக்கைகளை அவ்ரங்கஸீப் பெரிதும் மதித்தார். அவர்தம் நம்பிக்கை நிறைவேற்றத்துக்கு இயன்ற வகைகளிலெல்லாம் துணை நின்றார் என்பதற்கு அவர் வாழ்க்கை நெடுகிலும் எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் காண முடிகிறது. அவற்றுள் ஒரு சம்பவத்தை இங்கு சான்றாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

ஹிந்து சமய நம்பிக்கையும் மாமன்னர் அவ்ரங்கஸீபும்

வீர சிவாஜி அரசியல் காரணங்களுக்காக அவ்ரங்கஸீப் ஆலம்கீரால் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டிருந்த நேரம். சிறையில் திடீரென சிவாஜியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சிறையிலேயே தக்கமுறையில் தேர்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நோயின் கடுமை குறையவில்லை. அப்போது மாமன்னரிடம் சிவாஜி வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

“மதுராபுரியிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு இரு குதிரைகளைத் தானமாக வழங்க வேண்டும். மதுராபுரி கிருஷ்ணன் கோயில் பிராமணர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்தால் தன் நோய் குணமாகி விடும்” என்று வேண்டினார். கோயிலுக்குக் குதிரைகளைத் தானம் செய்வதன் மூலமும் பிராமணர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்வதன் மூலமும், தன் நோய் தீரும் என்ற சிவாஜியின் மத நம்பிக்கையை மாமன்னர் அவ்ரங்களிப் மதித்து, அவ்வாறு செய்ய அனுமதி வழங்கியதாக வரலாறு கூறுகிறது. மாமன்னருக்கு இஸ்லாமிய அடிப்படையில் இத்தகு செயலில் நம்பிக்கையில்லை என்றாலும், தன் விரோதியான சிவாஜி சிறைப்பட்டிருந்த வேளையிலும் அவரது ஹிந்து சமய நம்பிக்கையை மதித்து அனுமதி வழங்கினார் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் இஸ்லாம் பிற சமய நம்பிக்கைகளை மதிக்கப் பணித்திருப்பதுதான்.