பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149


வட இந்தியாவில் பக்தி இயக்கம் தோன்றப் பெரிதும் காரணமாயமைந்தவர் ராமானந்தர் என்பவராவார். காசிமா நகரைச் சேர்ந்த இவர் நீண்ட காலம் முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இஸ்லாமிய நெறியை மார்க்க அறிஞர்களிடமிருந்து கேட்டும் விவாதித்தும் தெளிவு பெற்றிருந்தார். இஸ்லாத்தின் உயிர் மூச்சுக் கொள்கையான தவ்ஹீது-ஏகத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் ஹிந்து மதப் பிரச்சாரத்தைச் செய்யலானார்.

இவரைத் தொடர்ந்து இவர் மாணவர் கபீர்தாஸ் இன்னும் வீறுகொண்ட முறையில் எழுச்சியோடு ஹிந்து மத பக்திப் பிரச்சாரம் வலுவானதொரு இயக்கமாகவே நடைபெற்றது. இவர் ஒரு பிராமண விதவையால் பெற்றெடுக்கப்பட்டு, ஒரு முஸ்லிம் குடும்பத்தவர்களால் வளர்க்கப்பட்டவர். எனவே, இரு சமயச் சார்பும் அவருக்கு அழுத்தமாக இருந்தபடியால் இவரது பக்தி மார்க்கப் பிரச்சாரம் இவரது குருவான ராமானந்தரையும் விஞ்சும் வகையில் அமைந்ததில் வியப்பேதும் இல்லை.

இவரது பக்திப் பிரச்சாரத்தின் மையப் பொருள் ஏகத்துவக் கடவுட் கொள்கையாகவே அமைந்திருந்தது. ‘ராமும் ரஹீமும் ஒன்றே’ என்பதை மிக அழுந்தத்திருத்தமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இரு சமய உணர்வுகளுக்கிடையே இருந்த இடைவெளியை குறுக்கி அவற்றிற்கிடையே ஒருவகை இணைப்பையும் பிணைப்பையும் உருவாக்க முயன்றார். இவரது பாடல்களில் மெய்ஞ்ஞான உணர்வுகளாகிய சூஃபித்துவத் தத்துவங்கள் விரவியிருந்தன. இதற்கு வளமூட்டும் வகையில் அரபி, பார்சி மொழிச் செல்வாக்கும் சற்றுத் தூக்கலாக இருக்கவே செய்தது. இவரைப் போன்றே தாது தயாள் என்பவர் பக்தி