பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

மார்க்கப் பிரச்சாரத்தில் “உருவமற்ற ஒரே இலாஹி நீயாகவே இருக்கிறாய். ராமும் ரஹீமும் நீயாகவே உள்ளாய். கேசவா என்பதுவும் கரீம் என்பதுவும் உன் பெயரேயாகும்” என்று பிரச்சாரம் செய்தார். மகாராஷ்ரத்தில் தோன்றிய ராமதேவர் உருவமற்ற ஒரே இறைவனை வணங்கப் பணித்த இவர், சிலை வணக்க முறையை வன்மையாகக் கண்டித்துத் தன் பக்தி மார்க்கப் பிரச்சாரத்தைச் செய்து வந்தார்.

இவரைத் தொடர்ந்து துக்காரம் என்பவர் பக்தி மார்க்கப் பிரச்சாரத்தை ஒரு இஸ்லாமியனைப் போன்றே செய்து வந்தார். இவரது பக்திப்பாடல்களில் இஸ்லாமிய உணர்வும் சிந்தனையும் நெறியும் பெரிதும் இழையோடின. சான்றாக அவர்,

“பெரிய திருப்பெயர்களில் முதலாவதாக இருப்பது ‘அல் லாஹ்’ என்பதேயாகும். அதனை ஜெபிக்க மறந்து விடாதே! அல்லாஹ் ஒருவனே. அவனுடைய நபியும் ஒருவரே. அங்கே நீ ஒருவனே. இங்கே நீ ஒருவனே! நண்பனே! நானுமில்லை, நீயுமில்லை!” என்பது அவரது பாடலின் கருத்து. தொடர்ந்து லால்தாஸ், பாபாலால் பிரான்நாத், ராம்சரண், ஜகஜீவன் தாஸ், புல்லா சாஹிப், சந்திரதாஸ், கேசவதாஸ், கரீம்தாஸ், தூலந்தாஸ் போன்ற பலரும் பக்தி இயக்கப் பிரச்சாரத்தை வடபுலமெங்கும் செய்து வந்தனர். இவர்தம் பக்திப் பிரச்சாரத்தின் மையப் பொருள் “இறைவன் ஒருவனே” அவன் உருவமற்றவன் என்பதேயாகும். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவர் தம் சொல்லும் செயலும் அமைந்திருந்தன.

இதே போன்ற பணியைத் தென்னகத்தில் குறிப்பாக, தமிழகத்தில் சித்தர்களும் சூஃபிகளாகிய மெய்ஞ்ஞானப் புலவர்களும் மிகத் திறம்பட சமய சமரச சன்மார்க்கப்