பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வர்கள். ஆகவேதான், அவர்தம் சமயங்கடந்த அருந் தொண்டை, சமரச சன்மார்க்கப் பணியைப் போற்றிப் புகழ வந்த குணங்குடியாரின் சீடர் மகாவித்துவான் சரவணப் பெருமாளையரவர்கள் தன் நான்மணி மாலையில்

கடல் சூழ் புவியில் உளத்து இருளைக்
கருணை ஒளியினால் களைந்து
விடல் சூழ் பவரிற் குணங்குடியான்
மிக்கோன் எனற்கோர் தடையுளதோ

எனப் புகழ்ந்துரைக்கலானார்.

குணங்குடியார் தன் குருபரனை ஒருபரனாகக் கொண்டாடிடும் சமநோக்கோடு “மதபேதம் ஒதி மதி கெட்டவர்க்கு எட்டாத வான் கருணை வெள்ளம்” எனக் கொண்டாடுவதற்கொப்ப அவர் தம் மாற்றுச் சமயச் சீடர்கள் மதபேதமின்றி அவரைப் போற்றிக் கொண்டாடலாயினர். மத பேதமற்ற சமரச உணர்வு முழுமையாக மக்களிடம் முகிழ்த்தெழ வேண்டும். அத்தகைய பெரு நிலை என்று ஏற்படுமோ என ஏங்கி,

“தீது மத பேதங்கள் அற்றுமே எங்குமிது
செல்வதுவும் எக்காலமோ”

எனப் பாடுகிறார்.

இறைவனின் இன்னருளைப் பெற அழைப்பு விடுக்கும்

போதுகூட ‘முஸ்லிம்கள்’ என்று குணங்குடியார் அழைக்க வில்லை. மத, இன, மொழி உணர்வுகட்கு அப்பாற்பட்ட முறையில் அனைவரையும் சமரச உணர்வோடு அழைக்கிறார்.

“போவோம் குணங்குடிக்கு எல்லோரும்
புறப்படுங்கள்
போவோம் குணங்குடிக்கு எல்லோரும்”