பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168


தற்காப்புக்கே போர்

இஸ்லாம் யாரோடும் சண்டையிடுவதை அறவே விரும்பவில்லை. வம்புச் சண்டைக்கு வருவோரை எதிர்க்க நேரிடும் போதுகூட தற்காப்புக்காகச் சண்டையிடுவதையே அனுமதிக்கிறது. நியாயமற்ற எதிரியின் தாக்குதலை எதிர்த்துப் போரிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் கூட, போர் என்பது கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டுமெனப் பணிக்கிறது. போரைப் பகைமையின் கருவி என இஸ்லாம் கடிந்துரைக்கிறது.

“உன்னை எதிர்த்துப் போரிடுவோரை எதிர்த்து அல்லாஹ்வுக்காகப் போரிடு ; ஆனால், அவர்களை முதலில் நீ தாக்கி விடாதே. ஆக்கரமிப்பாளர்களை அல்லாஹ் விரும்புவதில்லை” எனத் திருக்குர்ஆன் எடுத்தியம்புகிறது.

இதற்குக் கட்டியங் கூறும் மற்றொரு சான்றாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பிரிவான படைப்போர் இலக்கியங்கள் விளங்குகின்றன. தமிழில் புதுவகை இலக்கியங்களாக உருவாக்கப்பட்ட படைப்போர் இலக்கியங்கள் 18 உண்டு. இவ்விலக்கியங்களின் தலைப்புகள் அனைத்தும் கதாநாயகர், அல்லது நாயகிகளின் பெயரில் அமையாது, எதிரிகளின் பெயரிலேயே அமைந்துள்ளன. சாதாரணமாக யார் படையெடுத்து செல்கின்றாரோ அல்லது போருக்குக் காரணமாக அமைகின்றாரோ அவர் பெயரால் இலக்கியப் படைப்பின் தலைப்பு அமைவதுதான் மரபு. ஆனால், முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் உருவாக்கிய படைப்போர் இலக்கியங்கள் அனைத்துமே முஸ்லிம் அல்லாதவர்களின் எதிரிகளின் பெயராலேயே அமைந்துள்ளன. இவ்வாறு முஸ்லிம்களின் மீது ஆக்கிரமிப்பாகப் படையெடுத்து வந்த முஸ்லிம் அல்லாத எதிரிகளின் பெயராலேயே ‘இரவுசுல் கூல் படைப்போர்’, ‘செய்யிதத்துப் படைப்போர்’,