பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172


அதிலும்கூட, பெண்கள், வயது முதிர்ந்தோர், சிறுவர்கள், துறவிகள், பார்ப்பனர்கள், பாதிரிகள், தம் சமயப் பணியில் ஈடுபட்டிருப்போர், பார்வையிழந்தோர், உடல் ஊனமுற்றவர்கள், தீராப் பிணியால் பீடிக்கப்பட்டோர் ஆகியோரிடமிருந்து ‘ஜிஸ்யா’ வரி வசூலிக்கக் கூடாது என்பது விதியாகும்.

இந்த வரியை முஸ்லிம் மன்னர்கள் வசூலித்தது போன்று பதினான்காம் நூற்றாண்டில் யூத சமயக் குடி மக்களிடமிருந்து அன்றைய ஹிந்து மன்னர்கள் வசூலித்ததாக வரலாறு கூறுகிறது.

இஸ்லாமியர் ஆட்சியில் முஸ்லிமல்லாத குடிமக்கள் எக்காரணம் கொண்டும் அநீதிக்கு ஆளாகி விடக்கூடாது. அவ்வாறு நேரின் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் கொடுந் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இதைப் பற்றி அண்ணலார் அவர்கள் மிகக் கடுமையாகக் கருத்துரைத்திருக்கிறார்கள்.

“எவரேனும் முஸ்லிம் அல்லாத குடிமக்களைக் கொடுமைப்படுத்தினால், இறுதித் தீர்ப்பு நாளின்போது அக் கொடியவர்களுக்கு எதிராகக் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் சார்பில் நான் வாதாடுவேன்.” என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க, இதற்கு மாறுபட்ட கருத்தையும் உணர்வையும் வரலாற்றாசிரியர்களான ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே திரித்துக் கூறி, முஸ்லிம்களுக்கும் பிற சமயத்தினருக்குமிடையே வேறுபாட்டுணர்வும் அதன் மூலம் ஒற்றுமையின்மையும் என்றென்றைக்குமாக நீடிக்கச் செய்யும் சதிச் செயலேயன்றி வேறில்லை என்பதை அறிவுலகம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது.