பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178


“பெண்களே ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால் அதனை அற்பமானதாக கருதக் கூடாது; அது ஒரு ஆட்டின் குழம்பானாலும் சரியே”. எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எவ்வளவு அற்பமான பொருளாயினும், அதனை முகம் சுழிக்காது, விமர்சிக்காது அன்போடு பெற்று மகிழ வேண்டும். கொடுக்கப்படும் பொருளைவிட, கொடுக்க விழைந்த உள்ளத்து உணர்வையே பெரிதாகக் கருத வேண்டும். அதன்மூலம் அண்டை வீட்டாரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது அண்ணலாரின் அறிவுரையாகும்.

அண்டை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு உணவு சமைக்க முற்படும் போதே மனதில் உருக்கொள்ள வேண்டும் என்கிறார் பெருமானார் (சல்) அவர்கள்.

“வீட்டில் கறி சமைக்கும்போது அண்டை வீட்டாரைக் கருத்தில் கொண்டு குழம்பை (நீர் ஊற்றி) பெருக்கிக் கொள்வீர்களாக” என்பது நபிமொழியாகும்.

ஒரு சமயம் நபித் தோழர் ஒருவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களை நோக்கி,

“வீட்டின் இரு பக்கத்திலும் இரு வீட்டார் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால், நம் தேவை போக மீந்திருப்பது மிகக்குறைவான சிறுபொருளே. இந்த அன்பளிப்பை ஒருவருக்கு மட்டுமே கொடுக்கவியலும். இந்நிலையில் அதை யாருக்கு அளிப்பது?” என்று ஒரு வினாத்தொடுத்தார். அதற்கு விடையளிக்க முனைந்த பெருமானார் அவர்கள்,