பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179


அவ்விரு அண்டை வீட்டாருள் உனக்கு மிக அருகாக வாசலை உடையவருக்கு அந்த அன்பளிப்பை வழங்குவீராக எனக் கூறித் தெளிவுபடுத்தினார் மனிதப் புனிதர் மாநபி அவர்கள்.

ஒரு சமயம் நாயகத் திருமேனியிடம் ஒரு சஹாபி,

‘ஒரு பெண் நோன்பு நோற்பதன் மூலமும் தொழுகை, தான தர்மங்களால் பலரும் பாராட்டும் நிலைபெற்றிருந்தும் தன் நாவினால் தன் அண்டை வீட்டார்களைத் துன்புறுத்துகிறாள்...’ எனக் கூறிய மாத்திரத்தில்,

‘இதன் காரணமாக அவள் நரகத்திலிருப்பாள் எனப் பதிலளித்தார் அண்ணலார் அவர்கள், மேலும் நாயகத் திருமேனி அவர்கள்,

“இறுதித் தீர்ப்பு நாளில் அனைத்துக்கும் முதலாக (விசாரணைக்கு) வரும் இரு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு இரு அண்டை வீட்டார் பற்றியதாகும்.”

எனக் கூறியதன் மூலம் அண்டை வீட்டாரின் உறவின் தன்மை எத்தகு வலிமையானது என்பதை உணர்த்துகிறார் அண்ணலார் அவர்கள்.

இரு அண்டை வீட்டார்களில் ஒருவர் மற்றவர்க்கு ஏதேனும் தீங்கிழைத்திருக்கலாம்: அவையே மறுமை நாளின் இறுதித் தீர்ப்புக்கான விசாரணையின்போது மிகப் பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, விசாரணையில் முந்துரிமை பெறும் என்பது நாயகத் திருமேனியின் உட்கிடக்கையாகும்.

இவ்வாறு மக்களின் உரிமைகள் தொடர்பான அனைத்து அம்சங்களிலும் சிறப்பான முதலிடம் அண்டை வீட்டுக்காரர்களின் உரிமைக்கே என்பதை இஃது தெளிவாக்குகிறது.