பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

கலவரமோ சமயச் சண்டையோ, வகுப்பு மோதலோ அல்லது நாடுகளுக்கிடையே போரோ தலைதூக்க வாய்ப்பே இல்லாது போவதோடு மனித வாழ்க்கை இன்பப் பூங்காவாகவும் மாறி விடுமே!

முஸ்லிம் ஆனவன் முஸ்லிம் ஆகாத பெற்றோரிடமும்
உற்றாரிடமும் நடக்க வேண்டிய முறை யாது?

ஒரு முஸ்லிம் அண்டை அயலாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனப் பணிக்கிறதோ அதேபோன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் பிற சமயத்தைச் சார்ந்த தன் பெற்றோரிடமும் உற்றார் உறவினரிடமும் எம்முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக வழிவகைகளைக் கூறுகிறது.

பிற சமயத்தைச் சார்ந்த ஒருவர், இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளின்பால் ஈர்க்கப்பட்டவராக, அதன் இறைநெறி உணர்ந்து தெளிந்தவராக ‘கலிமா’ சொல்லி தீன் நெறியாகிய இஸ்லாமிய நெறியில் தன்னை முழுமையாக இணைத்து முஸ்லிம் ஆகிவிடுகிறார். அவரது வாழ்க்கைப் போக்கும் இறைவழிபாட்டு முறைகளும் முந்தைய சமயப் போக்கினின்றும் முற்றிலும் மாறுபட்டதாக அமைகிறது. இஸ்லாமிய நெறிமுறைகளை முற்றாகப் பேணி வாழ முனைகிறார்.

ஆனால், இவரைத் தொடர்ந்து இவருடைய பெற்றோரோ உற்றார் உறவினர்களோ யாரும் இஸ்லாம் ஆகவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் மதச் சம்பிரதாயப்படியே வாழ்கிறார்கள். இந்நிலையில் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிமாகியவர் பிற சமயத்தைச் சார்ந்த பெற்றோர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் தன் அன்பை, பாசத்தை, தன் இரத்தபந்த உறவை, உணர்வை எவ்வாறு பேணிக் காப்பது?