பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தலைவராக விளங்கும் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கும் மேலானவரா மூஸா (அலை) எனக் கேட்டதோடு யூதரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தும் விட்டார். அடிவாங்கிய யூதர் நபிகள் நாயகத்திடம் நீதி கேட்டு வந்து நின்றார். நபிகள் நாதர் தக்க முறையில் நீதி வழங்குவார் என்பது அவரது திட நம்பிக்கை.

கன்னத்தில் அறைவாங்கிய யூதரின் வாதத்தைக் கேட்ட பெருமானார், தன் அன்புக்குரிய அணுக்கத் தோழரான அபூபக்ர் அவர்களை வழக்கு மன்றத்துக்கு அழைத்து, ‘ஏன் அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தீர்கள்?’ என அபூபக்ரை நோக்கிக் கேட்டார் அண்ணலார் அவர்கள்.

‘இறுதித் திருத்தூதர் ஏந்தல் நபியைவிட மூஸா (அலை) அவர்களை உயர்த்திக் கூறியதைக் கேட்கப் பொறுக்காமல் கோபத்தில் அறைந்ததாகக் கூறினார். இதைக் கேட்ட அண்ணலார் அவர்களின் முகம் கடும் சினத்தால் சிவந்து விட்டது. இருப்பினும் பொறுமையோடு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்காதீர். அவ்வாறு ஆக்குவது தவறு’ எனக் கூறித் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கிலிருந்தும் தீர்ப்பிலிருந்தும் பல உண்மைகள் நமக்குத் தெளிவாகிறது. மாற்றுச் சமயத்தவரான யூதர் ‘அனைவரிலும் உயர்ந்தவர் மூஸா (அலை) அவர்கள்’ எனத் தன் யூதச் சமயச் சார்பான, யூதர்களின் கொள்கையை வெளிப்படுத்த யூதருக்குப் பூரண உரிமை உண்டு என்பதை பெருமானார் ஏற்றார். அதோடு அக்கொள்கை வழிப்பட்ட கருத்தைப் புலப்படுத்துவதைத் தடுக்க அல்லது தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதைப் பெருமானார் உறுதிப்படுத்தினார். தன் அணுக்கத் தோழரான அபூபக்ர் அவர்கள் மீது கடுங்கோபம் கொண்டதன் மூலம் பிற சமய