பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

சமயத்தாரை எந்த வழிமுறையைப் பின்பற்றியும் மத மாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளது. அதேபோன்று மாற்றுச் சமயத்தாரும் ஒரு முஸ்லிமிடம் எத்தகு கட்டாயத்தையோ அல்லது கட்டாயச் சூழல் உருவாக்கத்தையோ இஸ்லாம் உறுதியுடன் எதிர்க்கிறது.

இதை பெருமானார் நபித்துவம் பெற்ற பின், மக்கத்தில் வாழ்ந்த பதின்மூன்று ஆண்டு காலத்தில் அவரும் அவரது தோழர்களும் மாற்று மதத்தைச் சேர்ந்த சிலை வணக்கக் குறைஷிகளால் பட்ட பெருந்துன்பங்கள் மூலம் நன்கு உணர்ந்திருந்தார்கள். அக்கால கட்டம் முழுவதும் நபிகள் நாயகமும் நபித் தோழர்களும் தாங்கள் விரும்பி ஏற்றுப் பின்பற்றி வந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பேணும் உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட போராட்ட வாழ்க்கையாகவே அமைந்திருந்தது. தாங்கள் எந்த மார்க்க உரிமைக்காகப் போராடினார்களோ அதே போன்ற மதச் சுதந்திரம் மாற்றுச் சமயத்தார்க்கும் உண்டு என்பதை மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். எனவே, ஒவ்வொரு சமயத் தாருக்கும் தத்தமது சமயத்தைப் பேண, பின்பற்றி வாழ, முழு உரிமை உண்டு; அஃது அவர்களின் ஜீவதார உரிமை என உலகுமுன் உரத்த குரலில் இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

மக்காவில் சிலை வணக்கச் சமயத்தைச் சேர்ந்த குறைஷி களால் பெருமானாரும் அவரது தோழர்களும் பெருந்துன்பத் திற்காளான சமயத்தில்தான்,

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு; அவர்கள்
 மதம் அவர்கட்கு”

என்ற புகழ்பெற்ற இறை வசனம் வேதமொழியாக வெளிப்பட்டு மத உரிமையை நிலை நாட்டியது.