பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


வெறுப்பு மறைந்து விருப்பு மிகுந்தது

கட்டுரை வெளியான பின்பு பல வாசகர்கள் அக்கட்டுரை பற்றிக் கருத்துரைத்திருந்தார்கள். பலரும் வரவேற்று எழுதியிருந்த கடிதங்களில் திரு பி. பெருமாள் என்பவர் எழுதிய கடிதம் பின்வருமாறு இருந்தது. “...கட்டுரையைப் படிப்பதற்கு முன் இஸ்லாம் மதம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தேன். இந்தியச் சமயங்களை அழிக்க வந்த சமயம் என்றே இஸ்லாத்தைப் பற்றி எண்ணியிருந்தேன். பிற மதங்களை மதிப்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை குர்ஆனிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருவதன் மூலமாகவே சிறப்பாக விளக்கியிருந்தார் கட்டுரையாளர். இதைப் படித்தபின் என்னுள் இருந்த வெறுப்பு விலகியது மட்டுமல்ல, இஸ்லாம் மதம்மீது மதிப்பு ஏற்பட்டுவிட்டது. இஸ்லாம் கொள்கை வழி நடப்பதன் மூலமே மத சுமுக நிலை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.”

‘தினமணி’ ஆசிரியரின் தொலைபேசி உரையாடலும் தொடர்ந்து வெளியான வாசகர் கடிதமும் எனக்குப் பல உண்மைகளை வெளிப்படுத்தின. இஸ்லாத்தைப் பற்றியும் குறிப்பாக அதன் பிற சமயங்களைப் பற்றிய கருத்தோட்டம், பிற மத தீர்க்கதரிசிகள், அவர்கள் மூலம் வெளிப்பட்ட வேதங்கள், கடவுளர், சமயச் சடங்குகள் பற்றிய இஸ்லாமிய நோக்கும் போக்கும் போன்றவற்றை அறிந்து கொள்வதிலே மற்ற சமயத்தவர்க்குள்ள பெரும் நாட்டத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

நெறிப்படுத்தவே தவிர வெறிப்படுத்த அல்ல

உலகத்துச் சமயங்கள் அனைத்துமே அன்பையே போதிக்கின்றன. ‘அன்பின் வழியது உயர் நிலை’ என்பது தான் சமயங்களின் உயிரோட்டமான கருத்து. மனித நேயம்