பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

209

அமைந்துள்ளன. இவற்றுள் காணப்படும் ஒற்றுமைகளைக் காட்டிலும் வேற்றுமைகளே அதிகம். எனவே, வேற்றுமைகளுள் ஒற்றுமை காணும் தன்மைகளைத்தான் நாம் கைக்கொள்ள வேண்டுமே தவிர, ஒற்றுமை, சமயப் பொறை, சகிப்புத் தன்மை என்ற பெயரால் உண்மைக்கு மாறான முறையில் அனைத்துச் சமயப் போக்குகளையும் அப்படியே ஏற்றிப் போற்றி வணங்குவதாகப் பாசாங்கு செய்ய வேண்டிய அவசியமில்லை. இஃது ஒரு வகையான போலித்தனமான, உண்மைக்கு மாறான போக்கே என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

அவரவர் சமயம் அவரவர்க்கு என்பதே சத்தியம்

உள்ளது உள்ளவாரே அவரவர் சமயத்தை அவரவர் பேணி வரும் வகையில் அவரவர்க்கு அவரவர் மதம் என்பதே சரியானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க முடியும். மாறாக, எல்லா மதமும் எல்லோருக்கும் சம்மதம் என்பது முரண்பட்ட கோட்பாடே தவிர ஏற்புடைய கருத்தாக இருக்க முடியாது என்பதே தெளிந்த அறிவுடையோர் எண்ணம். இவ்வுணர்வின் வெளிப்பாடாக அமைந்திருப்பதே “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மதம்” என்ற திருமறையின் இறைவாக்கு.

எம்மதமும் சம்மதம் என்ற கருத்தை வலுவாகப் பரப்பி வருவோர் யார்? இவர்கள் எந்த ஒரு மதத்திலும் ஆழ்ந்த பற்றோ தெளிந்த சமய அறிவோ இல்லாதவர்களாகவே இருப்பதைக் காணலாம். இன்னும் சொல்லப்போனால் சமயச் சிந்தனையற்ற, நாத்திக உணர்வு கொண்டவர்களே இத்தகைய கருத்தையும் உணர்வையும் ஊட்டி வருகிறார்கள் எனலாம். இவர்கள் தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்களாக, சமயச் சீர்திருத்தவாதிகளாகக் காட்டிக் கொள்வதில் தனி மகிழ்ச்சி கொள்பவர்களுமாவர்.