பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

திருக்குர்ஆன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பது போன்று பிறசமயத்தவர்களும் அவர்கள் வணங்கும் இறைவன் மீதும் அவர்தம் வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் அதுவும் போற்றத்தக்கதேயாகும். இதைப் பற்றி இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன்,

“வேதத்தை உடையவர்களும் உங்களை (முஸ்லிம்களை)ப் போன்றே நம்பிக்கை கொண்டிருப்பின் அது அவர்களுக்கு நன்மையாகும்” (திருக்குர்ஆன் 3:110)

அசோகரின் சமய சகிப்புணர்வு

பெளத்த சமயத்தை இந்தியாவில் மட்டுமல்லாது கிழக்காசிய நாடுகளிளெல்லாம் முனைப்புடன் பிரச்சாரம் செய்தவர் அசோகச் சக்கரவர்த்தி. அவர்கூட, தன் மதத்தின் உயர்வைப் புலப்படுத்த பிற சமயக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் தாழ்த்திப் பேசுவதைத் தவறு என்கிறார். அவர் தனது கல்வெட்டுகளில் ஒன்றில், “ஒருவர் தம் மதத்தைக் கண்ணியப்படுத்துவதும், அளவு கடந்த பற்றுதல் காரணமாக மற்ற மதங்களைவிட தம் மதமே மேலானது என்று கூறுவதும் பிற மதங்களின் அந்தஸ்தைக் குறைப்பதாகும்.”

எனக் கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்க தாகும்.

விவேகானந்தர் நோக்கில் இஸ்லாம்

இஸ்லாமியத் தத்துவச் சிந்தனைகளும் கருத்துகளும் ஹிந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்தான விந்தையை பக்தி இயக்க வரலாறு தெளிவாக்கிக் கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி, சமூகக் கொடுமைகளால் எந்த அளவு பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற இஸ்லாமும் முஸ்லிம் ஆட்சியும் எந்த அளவு துணை நின்றன என்பதையும் அழகாக எடுத்து