பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219

களும் எங்களது எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” எனக் கூறியதன் மூலம் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் எதை அந்தந்த அரசுகளிடமிருந்து எதிர்பார்க்கிறார்களோ அதையே தான் இஸ்லாமியர்களாகிய இந்திய முஸ்லிம்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக, அதே சமயத்தில் அழுத்தந் திருத்தமாக இஸ்லாமிய நெறி வழி கேட்கிறார் காயிதே மில்லத் அவர்கள்.

இதே நிலையை கிருஸ்தவ, பெளத்த சிறுபான்மைச் சமயத்தவர்கட்கும் பொருந்தும் என்பது சொல்லாமலே பெறப்படுகிறது.

இந்தியாவில் 600 ஆண்டுக்கால முஸ்லிம் ஆட்சியில் தாங்கள் முற்றாகப் பேணி பின்பற்றி வந்த ஷரீயத் சட்டங்களை ஹிந்து சமயம் போன்ற பிற சமய மக்களிடம் திணித்ததாக வரலாறே இல்லை. இங்கு மட்டுமல்ல ஸ்பெய்ன் வரை பரவிய முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கிருஸ்தவர்கள், யூதர்கள் போன்ற பிற சமயத்தவர் மீதும் இம்மியளவு கூடத் திணித்ததாக, திணிக்க முயன்றதாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. காரணம், அவ்வாறு ஆட்சியாளர்களோ பிறரோ திணிக்க முயல்வதையே இஸ்லாம் கடுமையாகத் தடுக்கிறது. அவரவர் மதச் சம்பிரதாயப்படி வாழ முழுமையாக அனுமதிக்க வேண்டும் எனப் பணிக்கிறது. “அவர்கட்கு அவர்கள் மதம், நமக்கு நம் மார்க்கம்” என்பது திருமறை தரும் கட்டளையாகும். இதே முறைதான் தொடர வேண்டும் எனச் சிறுபான்மையினரான இந்திய இஸ்லாமியச் சமயத்தவரான முஸ்லிம்கள் விரும்புகிறார்கள்.