பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220


எது சிறந்த வீடு? நாடு?

ஒரு சமயம் நாயகத் திருமேனி அவர்கள் தன் தோழர்களை நோக்கி, “எது சிறந்த வீடு தெரியுமா?” எனக் கேட்டார்கள். பதில் கூற இயலாத நபித் தோழர்கள், அண்ணலாரிடம் அதற்கு விடை கூறுமாறு வேண்டினார்கள். அதற்குப் பதில் தர முனைந்த நபிகள் நாயகம் (சல்) அவர்கள், “எந்த வீட்டில் ஒரு அனாதைக் குழந்தை தான் ஒரு அனாதை என்ற உணர்வே இல்லாது அன்போடும் அரவணைப்போடும் இருக்கிறதோ, அந்த வீடுதான் சிறந்தது” என்று கூறினார்கள்.

அதேபோன்று எந்த நாட்டில் வாழ்கின்ற மத, இன, மொழிச் சிறுபான்மை மக்கள் தாங்கள் சிறுபான்மையினராக உள்ளோம் என்ற உணர்வே இல்லாது முழுப் பாதுகாப்போடும் சமத்துவத்தோடும் வாழ்கிறார்களோ அந்த நாடுதான் சிறந்த நாடாக இருக்க முடியும். நம்நாடு அத்தகைய சிறந்த நாடாக சமத்துவமிக்க ஜனநாயக நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நல்லுள்ளம் படைத்தோரின் பெரு விருப்பம்.

உலக ஒருமைப்பாட்டிற்குக் கட்டியம் கூறும்
பெருமானாரின் இறுதிப் பேருரை

நபிகள் நாயகம் (சல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது அரஃபாத் பெருவெளியில் ஆற்றிய இறுதிப் பேருரை மனித குல ஒற்றுமைக்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும் என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காகவே அமைந்திருக்கிறதெனலாம்.

“ஓ மனிதர்களே! உங்களுடைய இறைவன் ஒருவனே! உங்கள் மூலப் பிதா ஆதாம் (அலை) அவர்களும் ஒருவரே! அரபிகள், அரபிகள் அல்லாதவர்களைவிட எந்த விதத்திலும் சிறந்தவர்கள் அல்ல. அதுபோல அரபி அல்லாதவர்