பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221

களிலும் வெள்ளையர்கள் கறுப்பர்களைவிடச் சிறந்தவர்கள் அல்ல. ஆனால், உங்களில் ஈமானிலும் (இறை நம்பிக்கை) ஒழுக்கத்திலும் யார் உயர்ந்தவர்களோ அவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைவிட - ஒரு நாட்டான் மற்றொரு நாட்டானைவிட, ஒரு நிறத்தான் வேறு நிறத்தானைவிட எந்த விதத்திலும் சிறந்தவன் அல்ல.”

பெருமானாரின் இந்த இறுதிப் பொழிவில் வெளிப்படும் அறிவிப்பானது மனித சமத்துவத்தையும் உலக ஒருமைப்பாட்டையும் என்றென்றும் கட்டிக்காக்கும் சங்க நாதமாக அமைந்து அவனிக்கு வழிகாட்டிக் கொண்டுள்ளதெனலாம்.

சமயச் சாயம் பூசப்படும்
தனிப்பட்டோர் விருப்பு வெறுப்புகள்

சாதாரணமாக இரு சமயங்களைச் சார்ந்தவர்களிடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அதை இரு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகராறாக மட்டுமே கருதி செயல்பட வேண்டுமேயல்லாது இரு மதத்தவர்களுக்கிடையேயான மதச் சண்டையாகக் கருதும் போக்கு அறவே ஒழிய வேண்டும். சான்றாக, கரீமும் முருகனும் தனிப்பட்ட முறையில் சண்டையிட்டுக் கொள்ள நேர்ந்தால், தனிப்பட்ட இரு மனிதர்களிடையே ஏற்பட்ட சண்டையாகக் கொண்டு, யார் தவறு செய்தவரோ அவர் தண்டிக்கப்பட வேண்டும். மாறாக கரீமாகிய முஸ்லிமும் முருகனாகிய ஹிந்துவும் சண்டையிட்டுக் கொண்டதாகக் கருதும் போக்கு முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இன, மதக் கலவரங்களுக்கு மத உணர்வு அடிப்படையிலான இப்போக்கே அடித்தளக் காரணமாயமைகின்றது. எந்தவொரு சிறு செயலுக்கும் சமயச் சாயம் பூசும் போக்கு, குழப்பத்துக்கும்