பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வாழ்ந்து காட்டிய வாழ்வியல் முறையே பிற சமயத்தவர் உள்ளத்தை ஈர்த்து, அவர்களை இஸ்லாத்தின்பால் இணையத் தூண்டின என்பது ஒப்பமுடிந்த உண்மையாகும்.

வட இந்தியாவில் ஆஜ்மீரில் அடக்கமாகியுள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்தி, டெல்லி நிஸாமுத்தீன் அவுலியா, தமிழகத்தில் நத்தர்ஷா அவுலியா, நாகூர் ஷாகுல் ஹமீது ஆண்டகை போன்ற இஸ்லாமிய மேதைகளும் பீர் முஹம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானக் கவிஞர்களும் அவர்கட்குச் சீடர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோரும் பிற சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்து, இஸ்லாமிய நெறியை ஏற்று முஸ்லிம்களானவர்கள் என்பதே காலச்சுவடாகப் பதிந்து விட்ட உண்மை. இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் புலவர்களின் ஞானப் பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று அனைத்துச் சமய மக்களின் இதய மெல்லாம் எதிரொலித்தது போன்றே இன்றும் அவர்தம் மெய்ஞ்ஞானத் தமிழ்ப்பாடல்கள் இஸ்லாமிய நெறியை மக்கள் உள்ளங்களில் எத்தி வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இனியும் அப்பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே, இஸ்லாம் முஸ்லிம் மன்னர்களால், வாளால் பரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெள்ளத் தெளிந்த உண்மையாகும்.

இஸ்லாம் எச்சமயத்திற்கும்
எதிரானது அன்று

இஸ்லாமிய நெறியை மக்கள் தாங்களாக விரும்பி ஏற்றுக் கொண்டதற்கு அடித்தளக் காரணம். அஃது எந்தவொரு சமயத்திற்கும் எதிராக வந்த சமயம் அல்ல