பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவறான உணர்வுகளையும் கருத்துகளையும் இஸ்லாமிய விமர்சனம் என்ற போர்வையில் எழுத்து வடிவில் வலுவாகப் பரப்பினர் என்பது கடந்த கால வரலாறு. இஃது இஸ்லாத்தின் பிற சமயக் கண்ணோட்ட உணர்வுக்கும் சிந்தனைக்கும் முற்றிலும் மாறான ஒன்று என்பதை திருக்குர் ஆன், வாயிலாகவும் பெருமானார் வாழ்வையும் வாக்கை யும் விளக்கும் ஹதீஸ்கள் மூலமாகவும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

அனைத்து இறை தூதர்களையும் வேதங்களையும்
ஏற்பவனே உண்மையான முஸ்லிம்

உலகில் உள்ள அனைத்துச் சமயங்களையும் மதிக்கப் பணிக்கிறது இஸ்லாம். சமய சகிப்புணர்வு என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். இதனையே இஸ்லாமியக் கோட்பாடும் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் நமக்கு நாளும் பறை சாற்றிக் கொண்டுள்ளது.

ஒருவர் எந்த இறைதூதரை அல்லது சமயத் தலைவரை மனப்பூர்வமாக ஏற்றுப் பின்பற்றுகிறாரோ அவர் அச்சமயத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுவது உலகியல் மரபு. சான்றாக, மோசஸ் எனும் மூஸா (அலை) அவர்களை மட்டும் ஒருவர் ஏற்றால் போதும் அவர் யூத சமயத்தவராக ஆகிவிட முடியும். அதேபோன்று ஏசு நாதர் எனும் ஈஸா (அலை) அவர்களை ஒருவர் ஒப்புக் கொண்டுவிட்டால் போதும் அவர் கிறிஸ்தவராகிவிட முடியும். அவ்வாறே புத்தரை ஏற்பவர் பெளத்தராகவும் மகாவீரரைப் பின்பற்று பவர் சமண சமயத்தவராகவும் இருக்க முடியும். அதே வழியில் சிவனை ஏற்பவர் சைவராகவும் திருமாலைப் போற்றி வழிபடுபவர் வைணவராகவும் இருக்க முடியும்.