பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


நபிமார்களிடையே பேதம் கற்பிப்பதை இஸ்லாம் அறவே தடை செய்கிறது. தீர்க்கதரிசிகளிடையே வேறுபாடு காட்டுபவன் ‘காபிர்’ ஆவான் என இஸ்லாம் கருதுவதாக மார்க்க ஞானிகள் கூறியுள்ளனர்.

உலக மக்களுக்காக முப்பத்தியாறு முறை வேதம் வெளிப்பட்டிருப்பினும் அவற்றுள் வேறுபாடு இருப்பது போல் தோன்றினும் அவற்றுள் முரண்பாட்டைக் காணவே முடியாது

ஆதாம் முதல் அண்ணலார் வரை இஸ்லாம்

வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட இறைநெறியாகிய இஸ்லாம் மார்க்கம் அண்ணல் நபி (சல்) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது அல்ல. முதல் மனிதர் ஆதாம் (அலை) அவர்களால் இறைக் கட்டளைப்படி முதல் நபி என்ற முறையில் உலகுக்கு முன்மொழியப்பட்ட இறை நெறியாகும். ஆதாம் (அலை) தொடங்கிய அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்வரை இறைவனால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்கட்கும் அந்நெறியே இறைவனால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டது. இவ்விறை தூதர்கள் உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா மொழிகளிலும் தோன்றியிருக்கிறார்கள் என்பதை முன்பே பார்த்தோம். இதையே திருமறையாம் திருக்குர்ஆன்,

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை” (திருக்குர்ஆன் 35:24) மேலும்,

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு” (10:47)