பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கடலாகவே அமைகிறது எனக் கூறிச் சென்றுள்ளனர், நுணுகிப் பார்த்தால் அனைத்துச் சமயங்களின் வழிபாட்டு முறைகள் அனைத்துமே இறைவணக்கத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதை அறிந்தின் புறலாம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்துச் சமயச் சடங்குகளின் உள்ளீடான உணர்வும் கருத்தும் இறை வணக்கமாகவே இருப்பதைத் தெளிந்துணரலாம்.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகள்
அனைத்துச் சமய அடிப்படைகளே

அண்ணலாருக்கு முன்னர் வந்த இறைதூதர்களுக்கு வழங்கப்பட்ட இறைச் செய்திகளும் பெருமானார் (சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச் செய்தியும் ஒரே மாதிரியான அடித்தளத்தைக் கொண்டவை என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு வழங்கப்பட்ட இறைச் செய்தி மூலம் எல்லா வகையிலும் உறுதிப்படுகிறது.

“(நபியே!) உமக்கு முன்வந்த தூதுவர்களுக்குக் கூறப் பட்டது எதுவோ, அதனையேயன்றி (வேறொன்றும்) உமக்குக் கூறப்படவில்லை” (திருக்குர் ஆன் 41:43)

என்பது திருமறை தரும் செய்தியாகும்.

இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இஸ்லாத்தின் அடித்தளமான ஐம்பெரும் கடமைகளை இன்னும் நுணுக்கமாக ஆயும்போது அவ்வுண்மை தெள்ளதின் புலனாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் என்னனென்ன?

1. ஈமான் எனும் இறை நம்பிக்கை

2. தொழுகை எனும் இறை வணக்கம்