பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

3. நோன்பு எனும் விரதம்

4. ஜகாத் எனும் தான தருமங்கள்

5. ஹஜ் எனும் புனிதப் பயணம்

இந்த ஐம்பெரும் கடமைகளான கோட்பாடுகள் உலகத்துச் சமயங்கள் அனைத்தினுடைய அடித்தளமாகவும் அமைந்திருப்பதிலிருந்து, அகிலத்துச் சமயங்கள் அனைத்துமே இறைவனால் அருளப்பட்டவை. ஒரே விதமான போக்குடையவை என்பது தெளிவாகிறது. அவற்றை இனி ஆராய்வோம்.

இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை இஸ்லாத்தில் ஈமான் எனக் குறிப்பிடப்படுகிறது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஈமான் எனும் இறை நம்பிக்கை தலையாயதாக அமைந்துள்ளது.

இறை நம்பிக்கையை வலியுறுத்தாத சமயம் எதுவுமே மண்ணுலகில் இல்லையெனலாம். உலகத்துச் சமயங்கள் அனைத்தும் இறைவன் மீது மனிதன் ஆழமான, அழுத்தமான நம்பிக்கை கொண்டு இறை வழிபாடு செய்யச் சொல்கின்றன. இஸ்லாமிய இறைவழிபாட்டிற்கும் பிற சமய இறை வழிபாட்டிற்குமிடையே சிறு வேறுபாடு உண்டு. மற்ற சமயங்கள் வலிவுறுத்துவது போன்று இஸ்லாமும் இறையருட்திறத்தினை உணர்த்தி, இறைவன் மீது நீங்கொணா நம்பிக்கை கொள்ள வற்புறுத்தினாலும் அவ்விறை நம்பிக்கை ஒரே இறைவன் என்ற அழுத்தமான ஆழமான கோட்பாட்டின் மீது அமைந்துள்ளது.

“இறைவன் ஒருவனே; அவன் உருவமற்றவன்; அவன் இணையற்றவன்; துணையற்றவன்; அவன் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அலியும் அல்லன்; அவன்