பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மணிநேரமும் இறைச் சிந்தனையோடும் இறை அச்சத்தோடும் வாழ இஸ்லாமிய ஐவேளைத் தொழுகை முறை வழி வகுக்கிறது எனலாம்.

நோன்பு எனும் விரதம்

நோன்பாகிய விரதத்தைப் பற்றிப் பேசாத, வலியுறுத்தாத சமயம் எதுவுமே மண்ணுலகில் இருப்பதாகக் கூற முடியாது. அனைத்துச் சமயங்களுமே விரதம் இருக்கப் பணிக்கின்றன. விரதத்தை மேற்கொள்ளும் முறைகளில் வேறுபாடு இருக்கலாம். சில மதங்கள் ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் விரதம் இருக்கப் பணிக்கின்றன. சில சமயங்கள் சில வாரங்களோ அல்லது சில நாட்களோ உண்ணா நோன்பு மேற்கொள்ளும்படி கூறுகின்றன. இன்னும், ஹிந்துமதம் போன்ற சில சமயங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளோ அல்லது சில நாட்களோ அல்லது ஒரு சில மணி நேரங்களோ உண்ணாமல் விரதம் இருக்கப் பணிக்கின்றன. அதிலும், விரதத்தின்போது சோறு போன்றவற்றை விலக்கி விரதம் இருக்குமாறு அறிவுறுத்துகின்றன. ஆனால், எந்த மதமும் விரதத்தின்போது நீர் பருகக்கூடாது எனத் தடை விதிப்பதில்லை.

ஆனால், இஸ்லாமிய நோன்பாகிய விரதம் இவற்றினின்றும் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆண்டில் ரமளான் மாதம் முழுமையும் பகல் முழுவதும் எந்தவொரு உணவையும் அறவே உண்ணாது, ஒரு சொட்டு நீரும் பருகாது, புகைக்கவோ நுகரவோ செய்யாது நோன்பு நோற்க வேண்டுமெனக் கட்டளையிடுகிறது. இஃதன்னியில் ஒரு முஸ்லிம் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட புனித நாட்களில் நோன்பு நோற்கலாம்.