பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

வேண்டும். அவர் நல்ல உடல் நலமும் வலிமையும் உடையவராக இருக்க வேண்டும். அத்தகையவர் தம் வாழ்நாளில் ஒரு முறை சவுதி அரேபியாவில் உள்ள மக்கமா நகரில் அமைந்துள்ள ‘காபா’ புனித இறையில்லத்திற்குப் புனிதப் பயணமாகச் சென்று மினாவில் தங்கி குறிப்பிட்ட நாளில், நேரத்தில் ‘அரஃபா’ பெருவெளியில் தங்கி மீள வேண்டும். இதுவே ‘ஹஜ்’ புனிதப் பயணம் ஆகும்.

இவ்வாறு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் உலகெங்கும் உள்ள அனைத்து முக்கிய சமயங்களின் இன்றியமையா அடிப்படைக் கட்டுப்பாடுகளாகக் குறிக்கப்படுவதிலிருந்து இவையனைத்தும் ஒரே அடிப்படையிலிருந்து முகிழ்த்தவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால், இக்கடமைகளை நிறைவேற்றும் முறைகளில் வேறுபாடுகள் உள்ளன. இவை காலந்தோறும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சமயவாதிகளால் மாற்ற திருத்தங்கட்கு உட்படுத்தப் பட்டமையால் விளைந்தவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

திருத்தமிலா திருமறை, மாற்றமிலா மார்க்கம்

இஸ்லாம் முந்தைய சமயங்களின் அடித்தளத்தின்மீது அமைந்ததெனினும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (சல்) அவர்களின் மூலம் முழுமைப்படுத்தப்பட்ட இறுதி மார்க்கமாதலின் முந்தையன போன்று மனிதர்களின் மாற்ற திருத்தங்கட்குக் கடுகளவும் உட்படா வண்ணம் மாற்றமிலா மார்க்கமாக-திருத்தப்படா திருமறையாக-இறைவன் எவ் வடிவில் இறை தூதர்க்கு வழங்கினானோ அதே மூல வடிவில் இன்றும் இருந்து வருகிறது.

முந்தைய இறைதூதர்களின் வாழ்வும் வாக்கும் பிந்தையோரின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப மாற்றப்