பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அழைக்கப்படுகிறது. அதேபோன்று பெருமானார் நபியாக முகிழ்ப்பதற்கு முன்னர் 365 விக்ரகங்களை, ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டழைத்து வழங்கினாலும் பொதுவாக இறைவனை ‘அல்லாஹ்’ என்ற பொதுப் பெயரால் அழைத்து வணங்கி வந்தனர். தமிழில் கடவுள், இறைவன், ஆண்டவன் என்றெல்லாம் குறிப்பிடும் பரம்பொருளையே ‘அல்லாஹ்’ என்ற பெயரும் சுட்டுகிறது.

‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு ஆண்பால்-பெண்பால் என்பதெல்லாம் இல்லை ஒருமை-பன்மை இல்லை.

இறப்பு-பிறப்பு எதுவுமில்லை. உருவமிலா அல்லாஹ்வுக்குத் துணை, இணை இல்லை. அல்லாஹ் யாராலும் பெறப்படவுமில்லை, யாரையும் பெறவும் இல்லை. தேவை என்பது எதுவுமே இல்லை. இத்தகைய தன்மைகளைக் கொண்ட ஒரே இறைவனாகிய அல்லாஹ் இஸ்லாமியர்களாகிய முஸ்லிம்களுக்கு மட்டும் இறைவனில்லை. உலகிலுள்ள அனைத்துச் சமயங்களுக்கும்-மனித குலம் முழுமைக்குமான ஏகப் பரம்பொருளாகிய அல்லாஹ்வே ஏக இறைவனாவான்.

இஸ்லாம் வளர்ந்த வரலாறு

‘இஸ்லாம்’ இறைவனால் உருவாக்கப்பட்டு, மனிதர்களுக்கு வழங்கப்பட்ட இறை மார்க்கமாகும். முதல் மனிதரும் முதல் இறைதூதருமான ஆதாம் (அலை) அவர்கட்கு வழங்கப்பட்டது. இப்றாஹீம் (அலை) அவர்களால் ‘இஸ்லாம்’ எனும் பெயரிடப்பட்டது. அதன்பின் வந்த இறைதூதர்களாகிய நபிமார்களால் வளர்க்கப்பட்டு, இறுதி நபியாகிய அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்டது. இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவோர் முஸ்லிம்களாவர்.