பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


“(தொடக்கத்தில்) மனிதர் எல்லோரும் (ஒரே வழியிற் பட்ட) ஒரு சமுதாயத்தவராகவே விளங்கினர். (பின்னர்) இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே பிணக்குகள் தோன்றவே (நேர் வழியில் செல்வோருக்கு நற்செய்தி அறிவிப்போரும் (தீய வழியில் செல்வோருக்கு) அச்சமூட்டி எச்சரிப்போருமாகிய இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். மேலும், சத்தியத்தைக் குறித்து அவர்களிடையே தோன்றிய வேற்றுமைகள் பற்றித் தீர்ப்பு வழங்கும் பொருட்டு, அந்த இறைத் தூதர்களுடன் சத்திய வேதங்களையும் இறக்கினான். ஆனால், (இவ் வேற்றுமைகள் தோன்றிய ஆரம்பத்தில் மக்களுக்குச் சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்பட்டதனால் அல்ல-மாறாக) சத்தியத்தின் ஞானம் கொடுக்கப்பட்ட மக்களே வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர். ஒளிமிக்க, தெளிவான அத்தாட்சிகளும் போதனைகளும் வந்தபின்னர் ஒருவர் மீது அக்கிரமம் செய்யும் பொருட்டு அதிலே அவர்கள் வேற்றுமையைத் தோற்றுவித்தார்கள். எனவே, சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில் (தூதர்கள் மீது) ஈமான் கொண்டோருக்குத் தன் உத்திரவினால் தான் விரும்பியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.” (திருக்குர்ஆன் 2:213).

இவ்வாறு மனிதன் நழுவவிட்ட நேர்வழியை மீண்டும் மனிதர்களுக்கு நினைவுபடுத்தவும் எடுத்துக்கூறி விளக்கவும் பல்வேறு நாடுகளில், பல்வேறு கால கட்டங்களில் இறைவன் தன் தூதுவர்களை அனுப்பிய வண்ணம் இருந்தான் என்பதுதான் இத் திருமறை தரும் செய்தி.

இப்படி காலந்தொறும் அனுப்பப்பட்ட இறைதூதர்களும் மக்களுக்கு முந்தைய நபிமார்கள் உரைத்த உண்மைகளை, ஏகத்துவக் கொள்கைகளை, மறுமை வாழ்வின் மாட்சியைப் பற்றியே பெரிதும் போதித்தனர்.