71
விரும்புகிறோம்” எனக் கூறினர். இதைச் செவிமடுத்த பெருமானார் (சல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி,
“இறைவனால் படைக்கப்பட்டு, இறப்பின் மூலம் மீண்டும் இறைவனிடமே திரும்பச் செல்லும் மறைந்த அந்த யூதரும் நம் சகோதரரே. ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்குச் செய்யும் மரியாதையையே செய்தேன். அது நம் கடமையும் கூட” எனக் கூறி தன் தோழர்களின் ஐயம் போக்கினார் அண்ணலெம் பெருமானார் அவர்கள்.
இறந்தவர் இஸ்லாத்துக்கு நேர் எதிரான போக்குடைய மாற்றுச் சமயத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தும், அவரும் ஆதிப்பிதா ஆதாம் (அலை) வழி வந்த நம் சகோதரரே எனக் கொண்டு, அவரது இறுதிப் பயணத்தின்போது எழுந்து நின்று மரியாதை செய்த மாநபியின் செயல் மனித குலம் முழுவதும் கடைப்பிடித் தொழுகத்தக்க வழிமுறையாகும் என்பதில் ஐயமில்லை.
இஸ்லாம் மீண்டும் மீண்டும் மக்களுக்கு வலியுறுத்தும் விஷயம் உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தை, ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதான். அது மட்டுமல்ல நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தம் வாழ்நாள் முழுமையும் இதே கருத்தையே எல்லா வகையிலும் போதித்து வந்தார்கள். சமத்துவமாகவும் சமரசமாகவும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை அனைத்து வகைகளிலுமே வலியுறுத்தி வந்தார்கள்.
எண்ணத் தொலையா உட்பிரிவுகள்
தொடக்கக் காலத்தில் பல்கிப் பெருகிய மனிதர்கள் தேவையின் பொருட்டு கூட்டங் கூட்டமாகப் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்று வாழலானார்கள். இவ்வாறு பிரிந்தவர்கள் பல்வேறு குலத்தினராகவும் கோத்திரத்தினராகவும் அமைந்தனர்.