பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


காலப் போக்கில் நாடு, இன, மொழி, சமயப் பிரிவுகளோடு எண்ணற்ற உட்பிரிவுகளும் சேர மண்ணை எண்ணினும் சாதி போன்ற மனித உட்பிரிவுகள் எண்ணத் தொலையா அளவுக்குப் பல்கிப் பெருகி, தடம்புரண்ட மனித வாழ்வு ஆற்றொணா அல்லல்கட்கு ஆட்படுவதாயிற்று.

எது பெருமைக்குரியது?

மக்களில் பெரும்பாலோர் எதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் என்பதைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் தம் அறிவு, ஆற்றல் ஆகியவைகளால் பெருமைப்படுபவர்களை விட தான் சார்ந்த இனத்தைக் காட்டிப் பெருமைப்படுபவர்களே அதிகம். தம் குலப் பெருமையைப் பறை சாற்றிக் கொள்பவர்கள் அநேகர் உண்டு. தான் ஒரு குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சார்ந்த குலத்தில் பிறந்ததனாலேயே தான் எல்லா வகையிலும் சிறப்புக்குரியவன் எனப் பெருமைப்படுவோரையே எங்கும் காணமுடிகிறது.

இன்னும் சிலர் தாங்கள் பேசும் மொழியின் அடிப்படையில் தம் தகுதிப்பாட்டையும் பெருமையையும் வெளிப்படுத்திச் சிறப்படைய முயல்வர்.

மேலும் ஒரு சாரார் தாங்கள் பிறந்த நாட்டின் காரணமாகவே தங்கட்குப் பெரும் சிறப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதும் உண்டு. இன்னும் சிலர் தாங்கள் பெற்ற கல்வியைக் காட்டி மற்றவர்களினின்றும் மிகவும் மேம்பட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்ற முறையில் நடந்து கொள்வதும் உண்டு. கற்றவர்கள் என்ற கர்வத்தால் மற்றவர்களிடையே பேதம் பாராட்டுவதும் உண்டு. இத்தகைய போக்குகள் இறையம்சமான மனிதனின் செயல்களாக அமைதல் அறவே கூடாது என்கிறார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.