பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆனால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் எனப் பாராட்டிக் கொள்வதற்கு இல்லை”

(திருக்குர்ஆன் 49:13)

எனத் தெளிவுபட இறைவனே தன் திருமறையில் கூறியிருக்கிறான். எனவே, மனிதர்களிடையே இனங்காட்ட எழுந்த குலப்பிரிவும் கோத்திரக் கிளையும் மனித இனத்தைப் பிளவுபடுத்தவோ பேதம் கற்பித்து ஏற்றத் தாழ்வு பாராட்டவோ எழுந்தவை அல்ல என்பதை மனிதர்கள் நன்கு உணர்ந்து தெளிய வேண்டும்.

மனித குலம் முழுமையும் இறைவனின் குடும்பம்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதகுலம் முழுவதையுமே இறைவனின் குடும்பமாகவே வர்ணிக்கிறது. ஜாதி, குல, இன, மொழி, மத, நாடு காரணமாக எழும் எத்தகைய பெருமையையும் இஸ்லாம் அறவே ஏற்கவில்லை. மனித குலம் முழுவதையும் ஒரே இனமாக, ஒரே குலமாகவே காண்கிறது; மற்றவர்களையும் அவ்வாறே காணப் பணிக்கிறது.

இறைவணக்கத்தில் இணையிலா சமத்துவம்

இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை எல்லா வகையிலும் நிலை நிறுத்திய பெருமை இஸ்லாத்தையே சாரும். நாடாளும் மன்னராக இருந்தாலும் அல்லது மாபெரும் தலைவராக இருந்தாலும் அல்லது அன்றைய உணவுக்கு வழியில்லாத பரம ஏழையாக இருந்தாலும் தொழுகைத் தலத்தில் வேறுபாடு சிறிதுமின்றி அடுத்தடுத்து அமர்ந்து தொழுவர். இன்னும் சொல்லப் போனால் முந்தி