பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

வந்தவர் முன் வரிசையிலும் பிந்தி வந்தவர் பின் வரிசையிலும் நின்று தொழுவர். முந்தி வந்து வரிசையில் நிற்பவர் ஏழையாயிருப்பின் தொழும்போது பிந்தி வந்து பின் வரிசையில் நிற்பவர் மன்னரேயாயினும் முன்வரிசை ஏழையின் பின்னங்கால்களுக்கு அருகே தலை வைத்து சஜ்தா செய்து தொழ வேண்டும். இஃது முன்பு உலகம் என்றுமே கண்டறியாத உவகப் பெரும் சமத்துவமாகும். ஜனநாயகத்தின் ஆணிவேர் இங்கு அழுத்தமாக அமைகிறது எனலாம். இதை,

‘தொழுகையின்போது எவ்வித வேற்றுமை உணர்வுமின்றி ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து தொழும்போது, அவர்களிடையே ஒன்றுபடும் உணர்வு ஒப்பற்ற சகோதரத்துவ உணர்வாக முகிழ்த்தெழுகிறது’ எனக் கவிதை வடிவில் பாராட்டியுள்ளார் இந்தியாவின் கவிக்குயிலாக விளங்கிய கவியரசி சரோஜினி நாயுடு அவர்கள்.

சமயம் கடந்த தொண்டே இறை வணக்கம்

மனிதர்களில் எவன் சிறந்தவன் என்ற கேள்விக்கு மிக அருமையாக விடையளிக்கிறார் பெருமானார் (சல்) அவர்கள்.

“யாரிடமிருந்து மனித குலத்துக்கு நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அவன்தான் மனிதர்களில் சிறந்தவன்.” எனச் சிந்தைகொள் மொழியில் செப்புகிறார்.

இவ்வாறு, இறைவனின் பிரதிநிதியாக, இறைக் குடும்பமாகிய மனித குலத்தின் அங்கமான மனிதன் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவி தொண்டு, அவர் முஸ்லிமாக இருந்தாலும் அல்லது மற்ற சமயத்தவராக இருந்தாலும் அப்பணியை - தொண்டை ‘இறை வணக்கம்’ என இஸ்லாம் சிறப்பித்துக் கூறுகிறது.