பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


இதை மிகத் தெளிவாக விளக்கும் எத்தனையோ எடுத்துக் காட்டுகளை வரலாறு நெடுகக் காணலாமாயினும் குறிப்பிடத்தக்க சம்பவமொன்றைப் பெருமானார் பெரு வாழ்விலிருந்து எடுத்துக் காட்ட விழைகிறேன்.

பிறக்குமுன் தந்தையை இழந்த பெருமானார் ஆறு வயதில் தாயையும் இழந்தார். பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தன. அதன்பின் தன் பெரிய தந்தை அபூத்தாலிபின் அன்பிலும் அரவணைப்பிலுமே வளர்ந்தார்.

இறைக் கட்டளைக்கிணங்க இஸ்லாமிய நெறியைப் பிறருக்குணர்த்தி இஸ்லாமிய நெறியின்பால் இணையத் தூண்டிய பெருமானார் தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரையுமே கட்டாயப்படுத்தியோ அல்லது அத்தகு சூழலை உருவாக்கியோ இஸ்லாமிய நெறியை ஏற்கச் செய்ததாக வரலாறு இல்லை.

ஹிரா குகையில் முதன் முதல் பெருமானார் பெற்ற இறைச் செய்தியைக் கேட்ட, அவர் வாழ்க்கைத் துணைவி கதீஜா பெருமாட்டியார், அவர் கூறியதில் தானாக நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லிம் ஆனாரேயன்றி, பெருமானார் அவர்கள் ‘கணவன்’ என்ற தன் செல்வாக்கையோ பிற தன்மைகளையோ கையாண்டு இஸ்லாத்தை ஏற்கச் செய்யவில்லை.

இவ்வாறே இஸ்லாமிய நெறியின் மேன்மையையும் உயர்மிகு சிறப்பையும் உணர்ந்து தெளிந்து, தாங்களாகவே முன்வந்து இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம்கள் ஆனார்களே அன்றி ஆக்கப்படவில்லை.

ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் மக்கமா நகரை வெற்றி கொண்டபோதும், மக்காவாசிகள் அனைவரும்