பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83


உமர் (ரலி) வின் ஒப்பற்ற சமயப் பொறை

அண்ணலெம் பெருமானார் மதீனா பள்ளிவாசல் வளாகத்தில் கிருஸ்தவப் பாதிரிமார்களைப் பிரார்த்தனை செய்து கொள்ள அனுமதித்தது போன்றே ஜெரூசலம் நகர கிருஸ்தவ மாதா கோயிலினுள் உமர்(ரலி) அவர்களைத் தொழுகை நடத்த கிருஸ்தவ பாதிரிமார்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்ட அரிய நிகழ்ச்சி வரலாறாகத் தடம் பதித்து, சமய சகிப்புணர்வுக்கு, நல்லிணக்கத்துக்குக் கட்டியங்கூற நிற்பதைக் காணமுடிகிறது.

பெருமானார் (சல்) அவர்கட்குப் பின் இரண்டாவது கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரைப் போன்றே பிற சமயச் சகிப்புணர்வுக்கோர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார் என்பதை வரலாறு வழிமொழிந்து கொண்டுள்ளது.

ஒரு சமயம் ஜெரூசலம் நகரிலுள்ள யூத, கிருஸ்தவ சமயத் தலைவர்களின் அன்பான அழைப்பை ஏற்று அங்கு சென்றார். மூன்று பெரும் சமயத்தவர்கட்கு மிக முக்கிய மான நகராகும் ஜெரூசலம், “பைத்துல் முகத்தஸ் (தூய்மை மிக்க பரிசுத்த நகர்) என முஸ்லிம்களால் போற்றப்படும் ஜெரூசலம் நகருக்கு உமர் (ரலி) வருகை புரிந்தார்.

மிகப் புராதனமான அப் பண்டை நகரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வரும்போது தொழுகைக்கான நேரம் நெருங்கி விட்டது. அப்போது உமர் (ரலி) அவர்களும் கிருஸ்தவ குருமார்கள் சிலரும் ‘சர்ச் ஆஃப் ரிசரக்ஷன்’ எனும் மாதா கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். தொழுகை நேரம் நெருங்கி விட்டதை குறிப்பாக கலீஃபா உணர்த்திய போது உடனிருந்த கிருஸ்தவ குருமார்கள் புகழ்மிகு புராதனமான அத்தேவாலயத்துள்ளேயே தொழுகை நடத்திக் கொள்ளுமாறு வேண்டிக்