பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கொள்ள வேண்டும் என்பதற்கு இணையற்ற எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதை அறியலாம்.

மக்காவில் இறைச் செய்தி பெற்ற பெருமானார் (சல்) அவர்கள் அச்செய்தியைத் தனக்கு மிக அணுக்கமாக இருந்தவர்களிடம் மட்டும் கூறினார். அதைக்கேட்ட அவர்கள் அதை முழுமையாக ஏற்று முஸ்லிமாயினர். அத்தகையவர்களின் தொகையும் விரல்விட்டு எண்ணத் தக்கனவேயாகும். இறைச் செய்தியை-இஸ்லாமிய போதனையை மக்களிடையே உரக்கக் கூறிப் பிரச்சாரம் செய்தவரில்லை பெருமானார் அவர்கள். இரகசியமான கருத்துப் பரிமாற்ற அளவிலேயே அமைந்திருந்தது. இதையறிந்த சிலை வணக்கச் சமயத்தவர்களான மக்கா குறைஷிகள் அண்ணலாரை வெறுப்போடு நோக்கினர். ‘அல்லாஹ் ஒருவன்; அவன் உருவமற்றவன்; இணை, துணை இல்லாதவன்; முஹம்மது அவன் திருத்தூதர்’ என்ற கலிமா எனும் இறைநம்பிக்கைக் கோட்பாட்டை விட்டொழித்து, சிலை வணக்க முறையைக் கைக்கொள்ளுமாறு அண்ணலாரைப் பணித்தனர். தன் இறைக் கொள்கையிலிருந்து கடுகளவும் மாற பெருமானார் மறுத்தபோது ஆசை காட்டினர்; அச்சுறுத்தி எச்சரித்தனர். எதற்குமே இணங்காமல் இஸ்லாமிய நெறி பேணிய பெருமானாரைத் தங்கள் உருவ வழிப்பாட்டுச் சமயத்தை ஒழிக்க வந்த கொடிய விரோதியாகக் கருதி, கொடுமைகள் பல புரிந்தனர். இறுதியில் அவரையும் அவரைச் சேர்ந்த முஸ்லிம்களையும் மக்கத்தை விட்டே வெளியேறும்படியான நிலையை ஏற்படுத்தினர். இஸ்லாத்தைப் பேணி நடக்க இயலா மக்கா முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த மண்ணைத் துறந்து, சொந்த பந்தம், குடும்பம், சொத்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஓடி தம் விருப்பம்போல் இஸ்லாமிய நெறிப்படி வாழலாயினர்.