பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சமயங்கள் தாம் என்ற கசப்பான உண்மையை உணர்ந்து தெளிய வேண்டும். இந்த உணர்வையே இறுதி இறை வேதமான திருமறையாம் திருக்குர்ஆனும் மிகத் தெளிவாக உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள். நாமெல்லாம் அறிந்துணர்வதோடு உலகத்துக்கும் அழுத்தமாக உணர்த்த வேண்டிய அடிப்படையான ஒரு தத்துவமும்கூட.

அனைத்துச் சமயங்களையும் ஒப்புக் கொள்பவனே
முழுமையான முஸ்லிம்

புத்தரை மட்டும் ஏற்றுக் கொண்டால் அவன் பெளத்தனாக இருக்கலாம். இயேசுவை மட்டும் ஏற்பவன் கிருஸ்தவனாக இருக்கலாம். மகாவீரரை மட்டும் ஏற்றுக் கொண்டால் அவன் சமணனாக, ஜைனனாக இருக்கலாம். அதே போன்று நபிகள் நாயகம் (சல்) அவர்களை மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டேன் என்றால் நான் முழுமையான முஸ்லிம் ஆகிவிட முடியுமா? என்றால் முஸ்லிமாக இருக்கலாமே தவிர முழுமையான முஸ்லிமாக இருக்க முடியாது என்பதுதான் இஸ்லாமியக் கொள்கை. அவன் முழுமையான முஸ்லிம் ஆக வேண்டுமென்றால் 'இறைவனின் இறுதித் தூதராக நபிகள் நாயகம் (சல்) அவர்களை ஏற்றுக் கொள்வதோடு, முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) தொடங்கி மண்ணுலக மக்களுக்கு இறைநெறி புகட்ட, வல்ல அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறை வேதங்களையும் ஒப்புக் கொள்வதோடு, நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதையும் அவருக்கு இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதமாக திருக்குர்ஆன் திருமறையையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று உறுதி கொண்டால் மட்டுமே அவன் முழுமையான முஸ்லிமாக ஆக முடியும்.