பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

மகிழும் பானங்களையும் அடிக்கொரு முறை புகைத்து மகிழும் நோன்பாளிப் புகைப்புப் பழக்கத்தையும் பகல் நேரத்தில் விரும்பி உண்ணும் சுவைமிகு உணவையும் அடியோடு துறந்து, ஒரு சொட்டு நீரும் பருகாமல் அனைத்து உணவு வகைகளையும் தியாகம் செய்தவராகிறார்.

'ஜகாத்' எனும் ஏழையின் பங்களிப்பை வழங்குகின்ற முஸ்லிம் தான் பாடுபட்டுத் தேடிய பொருளைத் தன் கைப்படவே இரண்டரை சதவிகிதத்தைக் கணக்கிட்டு, அத் தொகையைப் பெறுவதற்கென விதிக்கப்பட்ட நபர்களைத் தேடிச் சென்று, இடது கை தருவது வலது கைக்குத் தெரியாதவாறு வழங்கி மகிழ்கின்றார். இவ்வாறு 'ஜகாத்' கடமையை நிறைவேற்றுவதன் மூலம் தான் பாடுபட்டுத் தேடிய திரவியத்தின் ஒரு பகுதியைத் தியாகம் செய்கின்றார்.

அதேபோன்று 'ஹஜ்' கடமையை நிறைவேற்ற முனையும் ஹாஜி தன் பெருளைச் செலவிட்டு, காலத்தை ஒதுக்கி, தன் குடும்பம் உற்றார் உறவினர்களை ஒரு குறிப்பிட்ட காலம்வரை விட்டுப் பிரிந்து, இறையில்லம் ஏகுகிறார். நாற்பது நாட்கள் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு தன் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுகிறார். இவ்வாறு தன் செளகரியங்கள் அனைத்தையும் தியாகம் செய்தவராகத் தன் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுகிறார்.

இவ்வாறு ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகள் அனைத்துமே தியாக உணர்வை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளன எனலாம்.

இறையச்ச உணர்வே இறைநெறியூட்டும் உந்துவிசை

இத்தகைய வணக்க முறைகளால் இறையச்ச உணர்வு வலுப்படுகிறது. வலுவான இறையச்ச உணர்வே இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் உந்து விசையாயமைகிறது. இதற்கு ஏற்ற சான்றாக, இன்றுவரை வரலாறு சுட்டிக் காட்டுவது ஃபிர்அவ்னைத்தான்.


8