பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வழிகாட்டியாயமைகிறது. நம் வாழ்க்கைத் தேர் வெற்றி எனும் இலக்கை எளிதாக அடைய, மாபெரும் ராஜபாட்டையாக அமைகிறதெனலாம். இஃது பல இனிய பண்புகள் உருவாக ஊற்றுக் கண்ணாக அமைகிறது என்பதில் ஐயமில்லை.

எளிமையே சுவர்க்கத் திறவுகோல்

இவ்வாறு நமக்குள் உருவாகி நிலைபெறும் பல இனிய பண்புகளில் ஒன்று எளிமை. இறை நம்பிக்கையும் இறையச்ச உணர்வும் கொண்டவனிடம் ஆடம்பரம் தலை காட்டாது. அடக்கமும் எளிமையும் அவன் வாழ்க்கைத் தேரின் இருபெரும் சக்கரங்களாக அமையும். இத்தகைய எளிமை வேட்கையாளர்களே இறை உவப்புக்கு உரியவர்களாக முடியும் என்பதைப் பெருமானார் (சல்) வாழ்வில் நடைபெற்ற ஒரு சுவையான சம்பவம் இன்றும் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்து, நம்மை இறை வழியில் ஊக்கி வருகிறது. மக்கா வெற்றியைத் தொடர்ந்து அரபகம் முழுமையும் அண்ணலாரின் ஆட்சியின் கீழ் வந்தது. அண்ணலாரின் ஆட்சி முறையின் மாட்சி கண்டு அண்டை நாட்டு ஆட்சியாளர்களெல்லாம், மன்னர்களெல்லாம் வியந்து நின்றனர். நேசக் கரம் நீட்ட முனைந்து, நேரில் வந்து உரையாடி, அறிவுரை பெற்றுச் சென்றனர். வரும் மன்னர்களின் மற்றைய அரசுப் பிரதானிகளும் ஆடை அலங்காரங்களுடன் அண்ணலாரை வந்து காண்பர். ஆனால், அண்ணலாரோ ஆடம்பரம் ஏதுமின்றி மிகமிக எளிய உடையுடன், ஒரு பக்கீரைப் போன்று காட்சி அளிப்பார். வருகின்ற மன்னர்களும் மற்றவர்களும் அமர நல்ல இருக்கைகளைத் தந்துவிட்டு, தான் சாதாரணமாக அமரும் கயிற்றுக் கட்டிலேயே அமர்ந்து உரையாடுவார். இது உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பாதித்து வந்தது. மற்ற நேரங்களில் எப்போதும்போல் இருந்தாலும் அண்டை நாட்டு மன்னர், பிரதானிகள் வரும்போது, அவர்கள் அளவுக்கு இல்லையென்றாலும் அரசுத் தலைவர் என்பதற்-