பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

திரும்பிய முஸ்லிம் வணிகர்கள் அன்றைய அரபக ஆட்சியாளர்களிடம் சிந்துப் பகுதியில் தங்கள் வணிகம் தொடர, பாதுகாப்புத் தருமாறு வேண்டினர். தங்கள் வணிகக் குடிகளின் கோரிக்கையை ஏற்ற அரபக ஆட்சியினர் காசிம் எனும் படைத் தளபதியின் தலைமையில் சிறு படையை சிந்துப் பகுதிக்குப் பாதுகாப்பளிக்க அனுப்பினர். வழக்கம்போல் சிந்துப் பகுதி வணிகர்கள், அப் பகுதிஆட்சியினரின் அரவணைப்போடு தாக்கப்பட்ட போது, அரபு வணிகர்கட்கு பாதுகாப்பளிக்கும் முறையில் தற்காப்புப் போரை நடத்தினர். இவ்வாறு முஸ்லிம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள காசிம் என்பவரின் தலைமையில் நடத்தப்பட்டது தான் சிந்துப் போர்.

இனி, இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள் தங்கள் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்குள்ள இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்திருக்கிறார்களா என்றால், அப்படி ஏதும் நடந்ததாக வரலாற்றில் எந்த ஒரு சம்பவத்தையும் நம்மால் காண இயலவில்லை. ஆயினும், இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களால் - வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்று அவ்வப்போது கூறப்பட்டே வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை.

அன்றிருந்த முஸ்லிம் விகிதாசாரமே இன்றும்

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவை 600 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் கூறுவதுபோல் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு தங்கள் ஆட்சியின் கீழ் இருந்த பிற சமய மக்களை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்ய முற்பட்டிருந்தால் இந்தியாவிலுள்ள மக்கள் அத்தனை பேருமே முஸ்லிம்களாகியிருப்பார்கள். அவ்வாறு ஆகவில்லையே? பாபரும் அக்பரும் அவ்ரங்கஸீப்பும் ஆண்டபோது எத்தனை சதவிகித மக்கள் முஸ்லிம்களாக இருந்தார்களோ, அதே அளவு சதவிகித மக்கள்தான் இன்றைக்கும் முஸ்லிம்களாக இந்தியாவில் உள்ளனர்.