பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129



"(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்கு) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக்கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்." (திருக்குர்ஆன் 14:4)

எனக் கூறியிருப்பதிலிருந்து ரிக் வேதம், சாம வேதம், யஜூர் வேதம், அதர்வண வேதம் ஆகியவைகளின் மூல வேத வாசகம் இறைவனால் முனிவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கலாம். இக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் காஞ்சி காமகோடி பீடப் பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்கள்,

“இந்த வேத மந்திரங்களைச் செய்த ரிஷிகளை இவற்றின் ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களோ இந்த வேதங்களை தாங்கள் செய்ய (இயற்ற)வில்லை என்கிறார்கள். எங்கள் மூலம் தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால்தான் எங்களை மந்திர ரிஷிகளாகச்சொல்லியிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததேயொழிய, நாங்களே அவற்றைச் சொல்ல (இயற்ற)வில்லை. நாங்கள் அப்படியே மனமடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் தான் (மந்த்ர த்ரஷ்டாக்கள்); செய்தவர்கள் அல்ல என்கிறார்கள்” என எடுத்துக் கூறுவதன் மூலம் வேதத்தின் மூல வாசகங்கள் இறைவனால் வழங்கப்பட்டவை என்பதும் அவை மனிதனால் இயற்றப்பட்டவை அல்ல என்பதும் தெளிவாகிறது.

இறைவனால் வழங்கப்பட்ட இறை வேதங்கள் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதனால் அலை மூல வடிவில் மீண்டும் மற்றொரு இறை தூதர் மூலம் வழங்கப்பட்டது என்பதுதான் வேத வரலாறு.