பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

ரால் நாடெங்கும் நிறைவேற்றப்பட்டு வந்தன. இறுதியாக அப்படையினர் மெளன்ட் சினாய் பகுதியை அணுகினர். பைஸாந்திய நாட்டின் எல்லையை ஒட்டினாற் போல் அமைந்திருந்த மெளன்ட் சினாய் பகுதியில் விக்கிரக ஆராதனையோடு கூடிய மாதா கோயிலும் ஒரு மடாலயமும் இயங்கி வந்தன.

ஆனால், அந்தக் குறிப்பிட்ட பகுதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்குட்பட்ட எல்லைப் பகுதியாக இருந்தது. லியோ இஸூரியனின் படைகள் இவற்றை இடிக்க வருவதை அறிந்த உமர் (ரலி) அவர்களின் படை வீரர்களான முஸ்லிம்கள், லியோ இஸ்லரியனின் படைவீரர்களோடு போரிட்டு, அவர்களை விரட்டி அடித்தனர். தேவாலயத்தையும் மடாலயத்தையும் முஸ்லிம் படைவீரர்கள் காப்பாற்றினர்.

லியோவைப் போன்றே முஸ்லிம்களும் சிலை வணக்க வழிபாட்டு முறைக்கு மாறுபட்டவர்கள்தான்; அவற்றை வெறுத்தொதுக்கும் இயல்பினர்தாம். ஆனால், அங்குள்ள கிருஸ்தவர்களின் சிலை வணக்க வழிபாட்டு முறையில் கொண்டிருந்த நம்பிக்கையைத் தங்கள் ஆட்சி, அதிகார, படை பலத்தைக் கொண்டு நசுக்கி அழிக்க அறவே விரும்பவில்லை. ஏனெனில், அது இஸ்லாமியக் கொள்கைக்கு நேர் மாறானதும் ஆகும். திருமறையாம் திருக்குர்ஆன்,

"அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகிறார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்." (திருக்குர்ஆன் 6:108)

எனக் கூறியிருப்பது பிற சமயத்தவர்களின், நம்பிக்கையை, வணக்கமுறைகளை, உணர்வுகளை மதிக்க வேண்டுமே தவிர மிதிக்கக்கூடாது. சிதைக்கவோ ஊனப்படுத்தவோ கூடாது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளதன் அடிப்படையில் முஸ்லிம் படைவீரர்கள் கிருஸ்தவ வணக்கத் தலங்களைக் காத்தார்கள். இதனால்,